கிணத்துக்கடவு அருகே லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன மேலாளர் பலி
கிணத்துக்கடவு அருகே லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன மேலாளர் பரிதாபமாக இறந்தார்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன மேலாளர் பரிதாபமாக இறந்தார்.
தனியார் நிறுவன மேலாளர்
கோவை மாவட்டம் நெகமம் அருகே கொண்டையகவுண்டன்பாளையம் அரண்மனைவீதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சந்திரபிரபா. இவர்களுக்கு 2 மகள்களும், விக்னேஷ் செந்தில் என்ற மகனும் உள்ளனர். கண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டார். மேலும் அவரின் மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. சந்திரபிரபாவும், விக்னேஷ் செந்திலும் தனியாக வசித்து வந்தனர். விக்னேஷ்செந்தில் கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தர நிர்ணய மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் தினசரி வேலைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினமும் வழக்கம்போல் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று விட்டு இரவு மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். கிணத்துக்கடவு அடுத்துள்ள தாமரை குளத்தை தாண்டி நான்கு வழிச்சாலையில் முள்ளுப்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது. மேம்பாலத்தின் ஓரத்தில் கனரக லாரி நின்று கொண்டிருந்தது.
லாரியின் பின்னால் ேமாதல்
அப்போது லாரி மீது மோட்டார் சைக்கிள் பின்னால் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட விக்னேஷ் செந்தில் படுகாயம் அடைந்தார். இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் விக்னேஷ் செந்திலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விக்னேஷ் செந்திலை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள், விக்னேஷ் செந்தில் உடலை பரிசோதனை செய்து பார்த்தபோது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து கனரக லாரியை ஓட்டி வந்த சிரஞ்சீவி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடிக்கடி விபத்துகள்
விபத்து குறித்து பொதுமக்கள் கூறியதாவது;-
கோவை பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் ரோடு அகலமாக உள்ளதே தவிர இந்த ரோட்டில் போதுமான வெளிச்சங்கள் இல்லை. மின்விளக்கு வெளிச்சம் இல்லாததால் முள்ளுப்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. அதே போல் அடிக்கடி வாகனங்கள் பழுதாகி நிற்கின்றன. நேற்று முன்தினம் இரவு கனரக லாரி ஒன்று டீசல் தீர்ந்ததால் முள்ளுப்பாடி மேம்பாலத்தில் ரோட்டோரம் நிறுத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கு சாலையோரம் நின்ற லாரி தெரியாததால் லாரியின் பின்பகுதியில் இருசக்கர வாகனம் மோதி உள்ளது. இதில் அந்த நபர் தலைக்கவசம் அணிந்தும் பலத்த காயமடைந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். ஆகவே தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நான்கு வழிச்சாலையில் விபத்து அதிகம் ஏற்படக்கூடிய பகுதிகளில் மின் விளக்குகளை பொருத்தி ரோட்டில் பழுதடைந்து நற்கும் வாகனங்களை கண்காணித்து அப்புறப்படுத்த ரோந்து குழுக்களை அமைக்க வேண்டும் என்றனர்.