லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி


லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி
x
தினத்தந்தி 26 Sept 2022 12:15 AM IST (Updated: 26 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தொழிலாளி பலியானார்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தொழிலாளி பலியானார்.

கூலித்தொழிலாளி

பொள்ளாச்சி அருகே கோட்டூரை சேர்ந்த வேல்முருகன் என்பவரது மகன் மேகலைவன் (வயது 22). இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு, பொள்ளாச்சியில் உள்ள ஒரு துணிக்கடையில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மேகலைவன் தனது மோட்டார் சைக்கிளில் கோட்டூரில் இருந்து கிணத்துக்கடவு வந்தார்.

அங்கு தனியார் கல்லூரில் படித்து வரும் தோழியை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் பொள்ளாச்சிக்கு புறப்பட்டார். கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை கல்லாங்காடு புதூர் பகுதியில் சென்ற போது, முன்னாள் சென்ற லாரி திடீரென திரும்பியது. இதனால் எதிர்பாராதவிதமாக லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மேகலைவன் படுகாயம் அடைந்தார். அவரது தோழி லேசான காயமடைந்தார்.

போலீசார் விசாரணை

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மேகலைவனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே மேகலைவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மேகலைவனின் அக்கா வைதேகி கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் லாரி டிரைவர் திடீரென அஜாக்கிரதையாக திரும்பியதால், லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது தெரியவந்தது.


Next Story