மோட்டாா் சைக்கிள்கள் மோதல்; கிராம நிர்வாக அலுவலர் உள்பட 3 பேர் படுகாயம்
திட்டக்குடி அருகே மோட்டாா் சைக்கிள்கள் மோதியதில் கிராம நிர்வாக அலுவலர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராமநத்தம்,
திட்டக்குடி அருகே உள்ள கொரக்கை கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 46). இவர் அதே ஊரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். சவுந்தரராஜன் தனது மோட்டார் சைக்கிளில் திட்டக்குடியில் இருந்து கொரக்கை நோக்கி சென்று கொண்டிருந்தார். திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் அய்யனார் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், சவுந்தரராஜன் சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.
இதில் கிராம நிர்வாக அலுவலர் சவுந்தரராஜன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கீழ்செருவாய் கிராமத்தை சேர்ந்த நல்லப்பன் மகன் வேல்முருகன் (35), இவருடைய நண்பர் தி.இளமங்கலம் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் (42) ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சவுந்தரராஜன் திருச்சி அரசு மருத்துவமனைக்கும், வேல்முருகன், இளங்கோவன் ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்போில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.