மயிலம் அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்:பா.ம.க. பிரமுகர் மகன் உள்பட 2 பேர் பலிநண்பரின் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு திரும்பியபோது பரிதாபம்


மயிலம் அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்:பா.ம.க. பிரமுகர் மகன் உள்பட 2 பேர் பலிநண்பரின் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு திரும்பியபோது பரிதாபம்
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலம் அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பா.ம.க. பிரமுகர் மகன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விழுப்புரம்

மயிலம்,

நண்பர் பிறந்த நாள் விழா

மயிலம் அருகே உள்ள சின்ன நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேசிங்கு மகன் குமார்(வயது 16). இவர் நேற்று முன்தினம் மாலை அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி மகன் சாந்தகுமார்(16), பாலு மகன் புஷ்பராஜ்(17) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் தீவனூரில் நடந்த நண்பரின் பிறந்த நாள் விழாவுக்கு சென்றார்.

பின்னர் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு 3 பேரும் அங்கிருந்து, இரவு சின்ன நெற்குணம் நோக்கி புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சாந்தகுமார் ஓட்டிச் சென்றார்.

டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்

மயிலம் அடுத்த பெரமண்டூர் கிராம சாலையில் சென்றபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த சாந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் விபத்தில் மற்ற 2 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக இறந்தார்.

புஷ்பராஜூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான குமாரின் தந்தை தேசிங்கு பா.ம.க. தொழிற்சங்க செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பரின் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு வரும் வழியில் விபத்தில் சிக்கி பா.ம.க. பிரமுகர் மகன் உள்பட 2 பேர் பலியான சம்பவம் மயிலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story