டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 9-ம் வகுப்பு மாணவன் பலி


டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 9-ம் வகுப்பு மாணவன் பலி
x

விக்கிரவாண்டி அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சிறுவாலை கிராமத்தை சேர்ந்தவர் வீரசேகர் (வயது 40). தொழிலாளி. இவரது மகன் கவுசிக்ராஜா (15). இவன் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பெரும்பாக்கம் அருகே வெங்கேடசபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு கவுசிக்ராஜா சென்றான். பாவந்தூரை சேர்ந்த தனது உறவினரும், விழுப்புரம் அரசு கலைக்கல்லுாரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருபவருமான ஏழுமலை (23) என்பவருடன் நேற்று மோட்டார் சைக்கிளில் சிறுவாலை நோக்கி புறப்பட்டு சென்றான். மோட்டார் சைக்கிளை ஏழுமலை ஓட்டினார். வெங்கந்தூர் சுடுகாடு அருகில் உள்ள வளைவு பகுதியில் முன்னாள் சென்ற டிராக்டரை, ஏழுமலை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் டிப்பரில் மோட்டார் சைக்கிள் மோதியது.

போலீசார் விசாரணை

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கவுசிக்ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். படுகாயம் அடைந்த ஏழுமலை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து கிராம நிர்வாக அலுவலர் காமராஜ் அளித்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story