தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார். நண்பர்கள் படுகாயம் அடைந்தனர்.
காவேரிப்பாக்கம்
தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார். நண்பர்கள் படுகாயம் அடைந்தனர்.
வாலாஜாபேட்டையில் உள்ள சோளிங்கர் ரோடு பகுதியில் வசிக்கும் குணசேகர் என்பவரின் மகன் கரண் (வயது 21). இவர் நேற்று நண்பர்களான கணபதி நகரை சார்ந்த மகேந்திரன் மகன் சரண்குமார் (22), அம்பேத்கர் நகரை சார்ந்த பாபு மகன் சுபாஷ் (20) ஆகியோரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
காவேரிப்பாக்கம் அருகே மலைமேடு பகுதியில் செல்லும்போது எதிர்பாராதவிதமாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை தடுப்பு சுவரின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது,
இதில் கரண் என்பவர் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் அடைந்து இறந்தார். மேலும் அவருடன் பயணம் செய்த நண்பர்களான சரண்குமார், சுபாஷ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் பலியான கரண் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.