மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் காயம்
தளவாபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கொந்தளம் அருகே கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 26). இவரது மனைவி ரோசி (20). இவர்களது மகள் மித்ரா (3). இந்தநிலையில் கார்த்திக் தனது குடும்பத்தினருடன் கரூர் மாவட்டம் தளவாபாளையத்தில் இருந்து பரமத்தி வேலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தளவாபாளையம் அருகே அய்யம்பாளையம் வாய்க்கால் அருகே சாலையின் இடதுபுறமாக சென்று கொண்டிருந்தபோது திருவெரும்பூர் அருகே காட்டூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த இளவரசன் மகன் நவீன் என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் கார்த்திக் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் கார்த்திக்கு பலத்த காயமும், அவருடைய மனைவி ரோசி மற்றும் குழந்தை மித்ராவுக்கு லேசான காயமும் ஏற்பட்டது. இதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்கள் 3 பேரையும் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பலத்த காயம் அடைந்த கார்த்திக் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய நவீன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.