ரெயில் பாதை பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி பலி
வெள்ளியணை அருகே ரெயில் பாதை பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தொழிலாளி
கரூர் மாவட்டம் ஜெகதாபி அருகே உள்ள துளசிகொடும்பை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 27), தொழிலாளி. இவருடைய மனைவி மதுபிரியா (24). இவர்களுடைய மகள் கவிநிலவு (1). முத்துக்குமார் நேற்று கரூர் சென்றுவிட்டு இரவு வெள்ளியணை வழியாக மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
வெள்ளியணை பகுதி தாளியாபட்டி பிரிவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக சென்றது. பின்னர் கரூர்-வெள்ளியணை சாலையின் அடியில் செல்லும் தனியார் சிமெண்டு ஆலையின் ரெயில் பாதை 10 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது.
பிரேத பரிசோதனை
இதில் பலத்த காயம் அடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் முத்துக்குமாரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.