செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்த மோட்டார் சைக்கிள் ஊர்வலம்-கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்
செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி
சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான செஸ் போட்டிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் விழிப்புணர்வு கோலம் வரைதல், விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் சைக்கிள் பேரணியும் நடத்தப்பட்டன.
அதே போன்று மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் மிதவை செஸ் போட்டி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கான செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன.
மோட்டார் சைக்கிள் ஊர்வலம்
மேலும், பள்ளி வாகனங்கள், பஸ்கள், ஷேர் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. அதே போன்று வண்ண பலூன்களை பறக்க விடுதல், ஏற்காடு மலை சாலையில் கொண்டை ஊசி வளைவுகளின் தடுப்புச்சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.
தொடர்ந்து போக்குவரத்து துறை சார்பில் நேற்று மோட்டார் சைக்கிள் ஊர்வலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் கார்மேகம் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் நெத்திமேடு வழியாக கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் முடிவடைந்தது. நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ராஜராஜன், சந்திரசேகர் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.