மோட்டார் சைக்கிள்களை திருடியவர் கைது


மோட்டார் சைக்கிள்களை திருடியவர் கைது
x
தினத்தந்தி 30 Jun 2022 3:28 PM GMT (Updated: 30 Jun 2022 3:34 PM GMT)

திண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த என்.எஸ்.நகரை சேர்ந்தவர் குமார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர், தனது மோட்டார் சைக்கிளை கலெக்டர் அலுவலகம் அருகே நிறுத்தி இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர், அவருடைய மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதேபோல் திண்டுக்கல் ரவுண்டுரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபம், திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஆகியவற்றின் முன்பு நிறுத்தியிருந்த தலா ஒரு மோட்டார் சைக்கிள்களும் திருடு போனது. திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களும் ஒரே நிறுவனத்தின் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில், திண்டுக்கல் நகர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்தனர். மேலும் 3 இடங்களிலும் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிள் திருடிய நபரின் அடையாளத்தை வைத்து தனிப்படை போலீசார் அவரை பிடித்தனர். விசாரணையில் அவர், திண்டுக்கல் தெற்குரத வீதியை சேர்ந்த தேவராஜ் (வயது 58) என்பது தெரியவந்தது. இதனைடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story