மோட்டார்சைக்கிள்-வேன் நேருக்குநேர் மோதல்:மனைவியுடன், துணை ராணுவ வீரர் பலி:சிறுவன் கண் முன் தாய்-தந்தை உயிரிழந்த பரிதாபம்


மோட்டார்சைக்கிள்-வேன் நேருக்குநேர் மோதல்:மனைவியுடன், துணை ராணுவ வீரர் பலி:சிறுவன் கண் முன் தாய்-தந்தை உயிரிழந்த பரிதாபம்
x
தினத்தந்தி 3 July 2023 12:15 AM IST (Updated: 3 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார்சைக்கிள்-வேன் நேருக்குநேர் மோதிய விபத்தில் மனைவியுடன், துணை ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார். சிறுவன் கண்முன் தாய்-தந்தை உயிரிழந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

தேனி

துணை ராணுவ வீரர்

உத்தமபாளையம் அருகே உள்ள தேவாரம் மல்லிங்காபுரத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 35). துணை ராணுவ வீரரான இவர், சத்தீஷ்கார் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் படை வீரராக பணியாற்றி வந்தார்.

அவருடைய மனைவி சசிதாரணி (26). இந்த தம்பதிக்கு விமல் (6) என்ற மகன் உள்ளான். இவன், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாரிச்சாமி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். இந்தநிலையில் நேற்று கடமலைக்குண்டுவில் உள்ள சசிதாரணியின் சகோதரி வீட்டுக்கு குடும்பத்துடன் செல்ல மாரிச்சாமி முடிவு செய்தார்.

அதன்படி மாரிச்சாமி, தனது மனைவி சசிதாரணி, மகன் விமலுடன் மல்லிங்காபுரத்தில் இருந்து மோட்டாா்சைக்கிளில் கடமலைக்குண்டுவுக்கு சென்று கொண்டிருந்தார். மோட்டார்சைக்கிளை மாரிச்சாமி ஓட்டினார். சசிதாரணி, விமல் ஆகியோர் பின்னால் அமர்ந்திருந்தனர்.

தம்பதி பலி

தேனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் மோட்டார்சைக்கிள் சென்று கொண்டிருந்தது. இதேபோல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து ராயப்பன்பட்டிக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று வந்தது.

அந்த வேனை உசிலம்பட்டியை சோ்ந்த மலைச்சாமி (30) என்பவர் ஓட்டினார். சின்னமனூரை அடுத்த சீலையம்பட்டி அருகே வந்தபோது வேனும், மோட்டார்சைக்கிளும் நேருக்குநேர் மோதின.

இந்த விபத்தில் மோட்டாா்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் மாரிச்சாமி, சசிதாரணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விமல் படுகாயமடைந்தான். தனது கண்முன் தாய், தந்தை உயிரிழந்து கிடந்ததை கண்ட சிறுவன் கதறி அழுதான். இந்த காட்சி, காண்போர் கண்களை குளமாக்கியது.

டிரைவர் கைது

விபத்து குறித்து தகவல் அறிந்த சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்த விமலை மீட்டு சிகிச்சைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் மலைச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்விக்குறியான வாழ்க்கை

விபத்தில் சிக்கி தம்பதி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுமட்டுமின்றி சிறுவன் விமலின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட்டது. தாய், தந்தையுடன் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்ட சிறுவனை கண்இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து நிர்கதியாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story