புதிய வாகன சட்டப்படி போலீசார் நடவடிக்கைசாலை விதிமீறல்களுக்கு அபராதம் கெடுபிடி வசூல்ஏற்புடையதா? வாகன ஓட்டிகள் கருத்து


புதிய வாகன சட்டப்படி போலீசார் நடவடிக்கைசாலை விதிமீறல்களுக்கு அபராதம் கெடுபிடி வசூல்ஏற்புடையதா? வாகன ஓட்டிகள் கருத்து
x

புதிய வாகன சட்டப்படி போலீசார் நடவடிக்கை சாலை விதிமீறல்களுக்கு அபராதம் கெடுபிடி வசூல் ஏற்புடையதா? வாகன ஓட்டிகள் கருத்து

சேலம்

நாடு முழுவதும் வாகன பெருக்கத்தாலும், போக்குவரத்து விதி மீறல்களாலும் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க மத்திய அரசு மோட்டார் வாகன சட்டம் 1988-ல், கடந்த 2019-ம் ஆண்டு திருத்தங்களை கொண்டு வந்தது.

அபராதம் உயர்வு

அந்த புதிய வாகன சட்டத்தின்படி இரண்டு சக்கர மோட்டார் சைக்கிள் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாவிட்டால் ரூ.1,000, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம், போக்குவரத்து சிக்னல்களை மீறினால் ரூ.500, பெர்மிட் இல்லாத வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம், 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.1,000, தகுதியற்ற நபர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் நபர்களுக்கு ரூ.5 ஆயிரம், பார்க்கிங் அனுமதி இல்லாத இடங்களில் வாகனம் நிறுத்தினால் ரூ.1,500 என்பன உட்பட 44 விதமான விதிமுறை மீறல்களுக்கு அபராத தொகை உயர்த்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு புதிய வாகன சட்டத்தின்படி அபராதம் விதிக்கும் நடைமுறை தீவிரப்படுத்தப்பட்டது.

சேலம் மாநகரில் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

அபராத தொகையை குறைக்கலாம்

சேலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் கவின்:-

போக்குவரத்து விதிமீறுபவர்கள் மீது போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களை பிடித்து போலீசார் ஸ்பாட் பைன் என்ற பெயரில் அதிக அபராதம் விதிக்கின்றனர். முக்கிய சாலைகளில் போலீசார் நின்று கொண்டு தலைக்கவசம் அணியாமல் வருபவர்களை திடீரென தடுத்து நிறுத்தி பிடிக்கும் போது அவரது பின்னால் வருபவர்கள் மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறும் நிலை ஏற்படுகிறது. புதிய போக்குவரத்து விதி திருத்தம் ஒரு புறம் இருந்தாலும் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களை முதல் முறை மன்னிக்கலாம். 2-வது முறை எச்சரிக்கலாம். 3-வது முறை அபராதம் விதிக்கலாம். இவ்வாறு தொடர்ந்து 3 முறை போலீசார் பிடிக்கும் போது வாகன ஓட்டிகள் தானாகவே தலைக்கவசம் வாங்கி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். மேலும் உடனடி அபராதத்தால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகும் நிலை தடுக்கப்படும்.

போலீசார் அபராதம் விதிக்கும் போது கல்லூரிக்கு செல்லும் மனநிலையே மாறி விடுகிறது. காரணம் போலீசார் பிடிக்கும் போது மாணவர்களிடம் அவ்வளவு தொகை இருக்காது. அப்போது வாக்குவாதம் ஏற்படும். அவர்கள் கெடுபிடியாக இருப்பார்கள். அதன்பிறகு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, நண்பர்கள், தெரிந்தவர்களிடம் தொடர்பு கொண்டு கடனாக பணத்தை வாங்கி அபராதம் கட்டும் நிலை ஏற்படும். எனவே அபராத தொகையை குறைக்கலாம்.

மன உளைச்சல்

சேலத்தில் நிதி நிறுவனம் நடத்தி வரும் விஜி:-

தலைக்கவசம் அணியாமல் வருபவர்களை போலீசார் பிடித்து அபராதம் விதிப்பது நல்லது. ஆனால் தற்போது வசூலிக்கப்படும் அபராத தொகை என்பது அதிகம். அதிக அபராதம் வசூலிக்கும் போது மன உளைச்சல் ஏற்படுகிறது. முக்கிய சாலைகள், ரவுண்டானா பகுதியில் தான் போலீசார் நின்று கொண்டு போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை பிடித்து அபராதம் விதிக்கின்றனர்.

போலீஸ் பொதுமக்களின் நண்பன் என்ற நடைமுறைக்கு ஏற்றவாறு சோதனை நடத்தப்படும் இடத்தின் அருகில் தலைக்கவசம் விற்க அனுமதி அளித்து, அபராதம் வசூலிக்கும் தொகையில் இருந்து ஒரு தலைக்கவசம் வாங்கி அதை அணியாமல் வருபர்களுக்கு வழங்கும் முறையை செயல்படுத்தினால் தொந்தரவு இருக்காது. வாகன ஓட்டிகளும் தலைக்கவசம் வாங்கிவிட்டோம் என்ற நினைப்பில் தினமும் அதை அணிந்து வருவார்கள்.

கையில் பணம் இருக்காது

என்ஜினீயரிங் கல்லூரி மாணவி ரோகிதா:-

தலைக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிப்பது நல்லது தான். ஆனால் அனைத்து நேரங்களிலும் அனைவரிடமும் கையில் பணம் இருக்காது. ஒரு முறை நானும், எனது சகோதரியும் ஒரு விழாவிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்த போது போலீசார் பிடித்தனர். அப்போது தலைக்கவசம் அணியாததால், அவர்களிடம் ஒரு முறை மன்னிக்கும் படி கேட்டோம். ஆனால் அவர்கள் ஏற்க மறுத்தனர்.

இதையடுத்து விழாவிற்கு எடுத்து சென்ற பணத்தை அபராதமாக கட்டிவிட்டு சென்றோம். எனவே தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு 2 முறை மன்னிப்பு வழங்கினால் பின்னர் அவர்களாகவே தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்ற மனநிலைக்கு வந்து விடுவார்கள்.

எட்டாக்கனி

சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ப.ஜாகீர் உசேன்:-

பொதுவாக தண்டனைகள் கடுமையாக்கப்படும் பொழுதுதான் குற்றங்கள் முற்றிலும் நடைபெறாமல் தடுக்கப்படும் என்பது உண்மைதான். ஆனால் அது சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பொருந்தும். நம் நாட்டுக்கு அல்ல. இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு முன்பாக மாநில அரசுகளும் மத்திய அரசும் சாலைகளை 100 சதவீதம் தரம் வாய்ந்தவைகளாக மாற்ற வேண்டும்.

தூசி இல்லாத சாலைகள் வேண்டும். மழைக்காலங்களில் பள்ளங்களில் விழுந்து அடிபட்டு இறப்பவர்கள் ஏராளம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் என்பது சாமானியருக்கு எட்டாக்கனி. இதில் காவல்துறையினர் பலரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு வழக்கு பதிவு செய்வது இல்லை. ஒருவேளை வழக்கு பதிந்தாலும் அடுத்த சில நாட்களில் நீதிமன்றத்திற்கு சென்று தண்டனை தொகையை செலுத்துவதற்கு முடியவில்லை. ஒரு மாதம், 2 மாதங்கள் காலதாமதம் ஆகின்றன. இது வாகன ஓட்டிகளுக்கு மேலும் ஒரு தண்டனையாக பார்க்கப்படுகிறது. எனவே, சாலை விதி மீறல்களுக்கு அதிகப்படியான கட்டண கெடுபிடி வசூல் ஏற்புடையதல்ல.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


90 சதவீதம் பேர் தலைக்கவசம் அணிகிறார்கள்

சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி:-

புதிய வாகன சட்டத்தின் மூலம் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தவோ, அபராதம் விதிக்க வேண்டும் என்ற எண்ணமோ போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு கிடையாது. விபத்துகள் மூலம் உயிர் பலி ஏற்படுவதை தடுக்கவே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம். புதிய வாகன சட்டத்தின் கீழ் அபராத தொகை அதிகமாக இருப்பது உண்மை தான். ஆனால் வேறு வழியில்லை.

போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சேலத்தில் தற்போது 90 சதவீதம் பேர் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்கிறார்கள். இதை 100 சதவீதமாக மாற்ற வேண்டும் என்பதே காவல்துறையின் இலக்கு. அதேபோல், கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்தால் சாலை விபத்துக்கள் நடப்பதை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story