திருச்சி மாநகரில் குண்டும், குழியுமான சாலையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


திருச்சி மாநகரில் குண்டும், குழியுமான சாலையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
x

திருச்சி மாநகரில் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி

திருச்சி மாநகரில் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதாள சாக்கடை பணி

திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம், அரியமங்கலம் குப்பை கிடங்கு பிரச்சினைக்கு விஞ்ஞான முறையில் தீர்வு காணும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரம் மாநகரில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

பல பகுதிகளில் நிறைவடையும் தருவாயிலும், சில பகுதிகளில் தற்போது தான் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கியும் உள்ளன. அதேநேரம் பாதாள சாக்கடை திட்டம் நிறைவடைந்த பகுதிகளில் அதற்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட்டு, தார்சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேடும், பள்ளம்

இவற்றில் பிரதான சாலைகளில் அவசர கதியில் சாலைகள் அமைக்கப்பட்டதால் அவை குறுகிய நாட்களிலேயே சேதமடைந்து விரிசல் விழுந்தும், மேடும், பள்ளமுமாக காணப்படுகின்றன. புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலைகளில் சில இடங்களில், குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யவும், பாதாள சாக்கடை இணைப்புக்கும் மாநகராட்சி ஊழியர்களும், ஒப்பந்ததாரர்களும் மீண்டும் குழி தோண்டி மூடுகிறார்கள்.

ஆனால் முறையாக மீண்டும் அந்த இடத்தில் தார் சாலை அமைத்தோ அல்லது கான்கிரீட் கலவை கொண்டு மூடியோ சரிசெய்யாமல் விட்டுவிடுகிறார்கள். இதனால் மாநகரில் பல இடங்களில் பிரதான சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாகவும், ஆங்காங்கே ஒட்டு போடுவதால் மேடும், பள்ளமாகவும் காட்சி அளிக்கின்றன.

சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்கள்

குறிப்பாக, புத்தூர் நால்ரோடு சந்திப்பு முதல் எம்.ஜி.ஆர். சிலை வரை இருபுறமும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை தினமும் ஏதாவது ஒரு இடத்தில் நள்ளிரவில் குழிதோண்டி விடுகிறார்கள்.

ஆனால் அவற்றை கான்கிரிட் கலவை கொண்டு உடனே சரிசெய்யாமல் ஜல்லிக்கற்களை மட்டும் கொட்டி சென்றுவிடுகிறார்கள். இதனால் சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள் சிதறி கிடக்கின்றன. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் தடுமாறுவதுடன், கீழே விழுந்து விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். குறிப்பாக புத்தூர் சாலையில் தான் ஆம்புலன்சுகள் அதிவேகமாக வந்து செல்கின்றன.

போக்குவரத்து நெரிசல்

இந்த சாலை வழியாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. ஆனால் இந்த சாலைதான் ஒட்டு சாலையாக பார்க்கும் இடம் எல்லாம் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுபோல் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து புதிதாக தார்சாலை அமைக்கப்பட்ட இடங்களில், சமீபத்தில் பெய்த மழைக்கு பிறகு சாலையின் நடுவில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. கனரக வாகனங்கள் சென்றால் அவற்றின் பாரம் தாங்காமல் சாலை சேதம் அடைந்து விடுகிறது. இதற்கு பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் கான்கிாீட் கலவை கொண்டு சரிவர மூடப்படாததே காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். எனவே திருச்சி மாநகரில் குண்டும், குழியுமான சாலையை சரிசெய்வதுடன், சாலையை தரமாகவும், விரைவாகவும் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story