வெள்ளைகோடு வரையாத வேகத்தடை
உடுமலையில் இருந்து ராமசாமி நகர் செல்லும் சாலையில் வெள்ளை கோடு வரையாத வேகத்தடையால் விபத்து ஏற்பட வாய்ப்பு
தளி
உடுமலையில் இருந்து ராமசாமி நகர் செல்லும் சாலையில் வெள்ளை கோடு வரையாத வேகத்தடையால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
வேகத்தடை
உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ராஜேந்திராரோடு, கபூர்கான் வீதி, ராமசாமி நகர் வழியாக சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் வகையில்பிரதான சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ரெயில்வே பாதைக்கு அருகில் இருந்து ராமசாமி நகர் எல்லை முடியும் வரையில் உள்ள பகுதி சேதம் அடைந்தது. அதைத் தொடர்ந்து சாலையை சீரமைத்து தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் பேரில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக எந்திரத்தின் மூலம் பழுது அடைந்து சாலை தோண்டி அகற்றப்பட்டது. பின்னர் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.அப்போது வளைவு மற்றும் இணைப்பு சாலையில் சந்திக்கும் பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டது. அதன் மீது வெள்ளை கோடுகள் அமைப்பதற்கோ, பிரதிபலிப்பான்கள் பதிப்பதற்கோ நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவருக்கு உள்ளாவதுடன் நிலை தடுமாறி கீழே விழுந்தும் வருகின்றனர்.
கோரிக்கை
போக்குவரத்து நெருக்கம் மிகுந்த இந்த சாலையில் வேகத் தடைகள் மீது வெள்ளை கோடுகள் வரைந்து பிரதிபலிப்பான் பதிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.