தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றம் கூகுள் மேப்பில் நீடிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றம் கூகுள் மேப்பில் நீடிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி மேம்பால பணிக்காக அறிவிக்கப்பட்ட போக்குவரத்து மாற்றம் கூகுள் மேமப்பில் நீடிப்பதால் வெளியூர் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேம்பால பணி
தூத்துக்குடி- திருச்செந்தூர் பிரதான சாலையில் துறைமுகம், ஸ்பிக்நகர் செல்லும் ரவுண்டானாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினால் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 2- ந் தேதி முதல் ராட்சத கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் கடந்த மாதம் 11-ந் தேதி வரை அந்த பகுதியில் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது,
பின்னர் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் 12- ந் தேதி முதல் வழக்கமான போக்குவரத்து நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் கூகுள் மேப்பில் முன்பு அறிவிக்கப்பட்ட போக்குவரத்து மாற்றம் தொடர்ந்து இருந்து வருகிறது.
வெளியூர் வாகனஓட்டிகள் அவதி
இதனால், வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கூகுள் மேப்பில் காட்டப்படும் சாலை வழிகாட்டுதலை பின்பற்றி செல்லும் வாகனங்கள் துறைமுக சாலையில் பல கி.மீ. தூரம் தேவையில்லாமல் சுற்றி வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கூகுள் மேப்பில் வழக்கமான போக்குவரத்து வழியை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், வெளியூர் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.