புழுதி பறக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
தஞ்சை கோடியம்மன் கோவில் அருகே உள்ள சாலையில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தஞ்சை கோடியம்மன் கோவில் அருகே உள்ள சாலையில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
புழுதி பறக்கும் சாலை
தஞ்சை கோடியம்மன் கோவில் அருகே தஞ்சை-பள்ளியக்கிரஹாரம் செல்லும் சாலை உள்ளது.இந்த சாலை வழியாக தஞ்சை திருவையாறு, திட்டை, பள்ளியக்கிரஹாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
இதனால் சாலையில் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் தற்போது கோடியம்மன் கோவில் அருகே உள்ள சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடு, முரடாக கிடக்கிறது. இதனால் கனரக வாகனங்கள், பஸ்கள் செல்லும் சாலையில் அதிகளவில் புழுதி பறக்கிறது.
வாகன ஓட்டிகள் அவதி
இதன்காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், புழுதி பறந்து வாகன ஓட்டிகளின் கண்களுக்கு விழுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
அதுமட்டுமின்றி புழுதி பறக்கும் சாலையினால் அந்த வழியாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.