சிறுவாச்சூரில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நிறைவடையாததால் வாகன ஓட்டிகள் அவதி
5 ஆண்டுகள் ஆகியும் சிறுவாச்சூரில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நிறைவடையாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
சிறுவாச்சூர் மேம்பாலம்
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் சாலை விபத்துகளை தடுக்க மத்திய அரசு சார்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 14-ந்தேதி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் நேற்றுடன் 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் சிறுவாச்சூரில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நிறைவடையவில்லை.
இதனால் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள இணைப்பு சாலையில் வாகனங்கள் வேகமாக செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் வாகனங்கள் ஆமைபோல் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வாகன ஓட்டிகள் அவதி
தற்போது கோடை விடுமுறை என்பதால் தினமும் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேம்பாலம் அமைக்கும் பணிகள் முற்றிலும் முடிக்கப்பட்டு எப்போதும் தான் பயன்பாட்டிற்கு வரும் என வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிறுவாச்சூரில் மேம்பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.