திருமானூர் ஒன்றியத்தில் பெயர் பலகை திருட்டால் வாகன ஓட்டிகள் அவதி


திருமானூர் ஒன்றியத்தில் தொடரும் பெயர் பலகை திருட்டால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து உள்ளனர். எனவே இந்த சம்பவத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்

பெயர் பலகை திருட்டு

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், கிராம சாலைகளில் அந்தந்த பகுதிகளில் உள்ள ஊரின் பெயரை தெரிந்து கொள்ளும் வகையில் நெடுஞ்சாலை துறை சார்பில் கிராமத்தின் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் புதிதாக அப்பகுதிக்கு வரக்கூடியவர்களும் ஊரை தெரிந்து கொள்வதற்கு வசதியாக இவ்வகையான பலகைகள் மற்றும் திசைக்காட்டி பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தின் கிழக்கு பகுதியில் உள்ள விழுப்பனங்குறிச்சி, தூத்தூர், கோவிலூர், பொய்யூர் உள்ளிட்ட சாலைேயாரங்களில் வைக்கப்பட்டிருந்த கிராமத்தின் பெயர் அடங்கிய 15-க்கும் மேற்பட்ட பலகைகள் காணாமல் வெறும் கம்பம் மட்டும் நிற்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாகன ஓட்டிகள் அவதி

மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள் மற்றும் கிராமத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளை விட்டு விட்டு கிராமத்திற்கு வெளியே உள்ள மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளை குறிவைத்து திருடி செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் அவதியடைந்து வருகிறார்கள். இவ்வகையான பலகைகள் தரமான அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளதாகவும், குறைந்தது 3 முதல் 7 கிலோ வரை எடை உள்ளதாகவும் இருக்கும். இது கிலோ ரூ.2 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமானூர் ஒன்றியத்தின் மேற்கு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தின் பெயர் அடங்கிய பலகைகள் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து திருமானூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையில் தற்போது திருமானூர் கிழக்கு பகுதியில் கிராமத்தின் பெயர் அடங்கிய பலகைகள் திருடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே போலீசார் கிராமத்தின் பெயர் அடங்கிய பலகைகளை திருடுபவர்களை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story