4 வழிச்சாலை அமைக்கும் பணி: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி


4 வழிச்சாலை அமைக்கும் பணி:     போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 28 Sep 2023 6:45 PM GMT (Updated: 28 Sep 2023 6:46 PM GMT)

புதுச்சத்திரம் அருகே 4 வழிச்சாலை அமைக்கும் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.

கடலூர்

பாலம் கட்டும் பணி

விழுப்புரத்தில் இருந்து கடலூர் வழியாக நாகப்பட்டினம் வரை 194 கிலோ மீட்டர் தூரம் 4 வழிச்சாலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இதில் 75 சதவீத பணிகளுக்கு மேல் முடிவடைந்து விட்டன. மீதியுள்ள பணிகளையும் முடிக்க நகாய் அதிகாரிகள் தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள். இந்த சாலையில் ஆங்காங்கே உயர்மட்ட, சிறிய மேம்பாலங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் புதுச்சத்திரம் அடுத்த மேட்டுப்பாளையம்-பெரியப்பட்டு செல்லும் வழியில் பரவனாறு குறுக்கே பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது.

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்

இதற்காக ஒரு சாலை பகுதியை அடைத்து, அதில் பணிகள் நடந்து வருகிறது. இதனால் அனைத்து வாகனங்களும் ஒரு வழிப்பாதை வழியாக செல்கிறது. அவ்வாறு செல்லும் போது, குறுக்கே வாகனம் வந்தால், சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. முன்பு இதில் ஒப்பந்த ஊழியர்கள் நின்று, ஒரு புறம் வாகனத்தை நிறுத்தி, எதிர்புறத்தில் இருந்து வாகனங்கள் வந்த பிறகு மறுபுறம் வரும் வாகனத்தை விட்டு வந்தனர். ஆனால் கடந்த 2 வாரமாக அந்த பணியை யாரும் செய்வதில்லை.

இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கிறது. ஆகவே இதில் நகாய் ஊழியர்களோ அல்லது புதுச்சத்திரம் போலீசாரோ பணியில் இருந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பஸ் பயணிகள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story