பெயர்ந்து கிடக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
பொள்ளாச்சி ரெயில் நிலைய பகுதியில் பெயர்ந்து கிடக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி ரெயில் நிலைய பகுதியில் பெயர்ந்து கிடக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
ரெயில் நிலைய சாலை
பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, நெல்லை, தென்காசி, திருச்செந்தூர், மதுரை, திருவனந்தபுரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ரெயில் போக்குவரத்து வசதி உள்ளது. இதேபோன்று தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்து சரக்கு ரெயிலில் பொள்ளாச்சிக்கு பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. அதில் உரம், நெல், மக்காசோளம், கோதுமை, சோயா உள்ளிட்ட பொருட்கள் ரெயில் மூலம் பொள்ளாச்சிக்கு வருகிறது. அந்த பொருட்கள், லாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக சரக்கு ரெயில் நிறுத்தப்படும் நடைமேடை பகுதியில் இருந்து மீன்கரை ரோட்டிற்கு சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
பதம் பார்க்கிறது
இந்த சாலை பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் சாலை பெயர்ந்து கம்பிகள் வெளியே நீண்டு கொண்டு இருக்கின்றன. அவை லாரிகளின் டயர்களை பதம் பார்க்கின்றன.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
அந்த சாலையில் கான்கீரிட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. சில நேரங்களில் லாரி டயர்களை அந்த கம்பிகள் பதம் பார்த்து விடுகின்றன. மேலும் இருசக்கர வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே அதிகாரிகள் பழுதடைந்த அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.