சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி


சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 15 Sep 2023 6:45 PM GMT (Updated: 15 Sep 2023 6:46 PM GMT)

லெட்சுமாங்குடியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

லெட்சுமாங்குடியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

நான்கு வழிச்சாலை

கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி பாலத்தை மையமாக கொண்டு, திருவாரூர் சாலை, மன்னார்குடி சாலை, வடபாதிமங்கலம் சாலை, கொரடாச்சேரி சாலை என நான்கு பிரிவு சாலை உள்ளது. இந்த நான்கு வழி சாலையிலும், கடைவீதிகள், பஸ் நிறுத்தங்கள் மற்றும் தாலுகா அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல அலுவலகங்களும், வழிபாட்டு தலங்களும் அமைந்துள்ளன. இந்த பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக விளங்குகிறது.

சுற்றித்திரியும் மாடுகள்

மேலும், இந்த நான்கு வழி சாலையில் திருவாரூர், மன்னார்குடி, குடவாசல், கும்பகோணம், நீடாமங்கலம், கொரடாச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, காரைக்கால், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, மதுரை, சென்னை போன்ற ஊர்களுக்கும் சென்று வரக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி-கல்லூரி வாகனங்கள், அவசர நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில், லெட்சுமாங்குடி சாலையில், அடிக்கடி மாடுகள் சுற்றித்திரியும் நிலை நீடித்து வருகிறது.இத்தகைய மாடுகளுக்கு உரிமையாளர்கள் உள்ளார்களா?என்பது கூட தெரியாத புதிராக உள்ளது.

பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்

இந்த மாடுகள் இரவு, பகலாக சாலைகளிலேயே சுற்றி திரிகின்றன. அதுவும், சில மாடுகள், லெட்சுமாங்குடி நான்கு வழி சாலையின் நடு மையத்தில் நின்றபடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.

இதனால்,வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, லெட்சுமாங்குடி நான்கு வழி சாலை மற்றும் பல்வேறு சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story