அடிக்கடி ஏற்படும் குண்டும், குழியால் வாகன ஓட்டிகள் அவதி


அடிக்கடி ஏற்படும் குண்டும், குழியால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு சர்வீஸ் சாலையில் அடிக்கடி ஏற்படும் குண்டும், குழியால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவு சர்வீஸ் சாலையில் அடிக்கடி ஏற்படும் குண்டும், குழியால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

குடிநீர் திட்ட குழாய்

கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தை அருகே சர்வீஸ் சாலை வழியாக அண்ணாநகர், பகவதி பாளையம், சாலைப்புதூர், அப்துல்கலாம் நகர், செம்மொழி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடையாமல் இருப்பதால், இந்த சாலை குறுகலாக உள்ளது.

சாலையின் அடிப்பகுதியில் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதிகளுக்கு வினியோகம் செய்யும் அம்பராம்பாளையம் குடிநீர் குழாய் இணைப்பு மற்றும் குறிச்சி குனியமுத்தூர் குடிநீர் திட்ட குழாயும் செல்கிறது. டி.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு உள்ள சாலையில் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்ட வருகிறது. இதனால் அப்பகுதி சாலையில் ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டு இருந்ததால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது.

வாகன ஓட்டிகள் அவதி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் உடைப்பை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சரிசெய்தனர். அதேபோல் ரோட்டில் ஏற்பட்ட குழிகளும் மூடப்பட்டது. ஆனால், மேற்கண்ட ஊர்களுக்கு செல்லும் சர்வீஸ் சாலையை இன்னும் நெடுஞ்சாலை துறையினர் விரிவாக்கம் செய்யாமல் உள்ளதால், சாலையோரம் புதர்கள் மண்டி கிடக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சர்வீஸ் சாலையில் மீண்டும் பல இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை தடுக்க தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு, சர்வீஸ் சாலையை விரிவாக்கம் செய்வதுடன், சாலையில் ஏற்பட்டு உள்ள குழிகளை மூடி, சாலையையும் சாலை ஓரங்களில் உள்ள புதர்களையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story