முருக்கம்பட்டு ரெயில்வே சுரங்கப்பாதையில் சூழ்ந்துள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


முருக்கம்பட்டு ரெயில்வே சுரங்கப்பாதையில் சூழ்ந்துள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x

முருக்கம்பட்டு ரெயில்வே சுரங்கப்பாதையில் சூழ்ந்துள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு பகுதியில், தானியங்கி ரெயில்வே கேட் இயங்கி வருகிறது. இந்த ரெயில்வே கேட் வழியாக மேல்முருக்கம்பட்டு, மங்காபுரம் காலனி உட்பட பல்வேறு ஊர்களுக்கு பொதுமக்கள், கார், வேன் மூலம் சென்று வருகின்றனர். இந்த நிலையில் ரெயில்வே கேட் மூடியிருக்கும்போது சிலர் நுழைந்து ஆபத்தான முறையில் கடக்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.

இதுதவிர, இருசக்கர வாகன ஓட்டிகளும் கேட் மூடியிருப்பினும் அதில் நுழைந்து வேகமாக சென்னை - தேசிய நெடுஞ்சாலைக்கு வரும்போது அதிவேகமாக வரும் பிற வாகனங்களால் விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழக்கின்றனர். விபத்துகளை தடுப்பதற்கு கடந்த ஆண்டு தெற்கு ரெயில்வே நிர்வாகம் தீர்மானித்து ரூ.3 கோடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாகன ஓட்டிகளின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.

மேலும் இந்த சுரங்கப்பாதையில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்த கனமழையால் சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட ரெயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டும், வருங்காலங்களில் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காதவாறு சுரங்கப்பாதையின் மேல் மேற்கூரை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story