பழுதான சாலையால் பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்


பழுதான சாலையால் பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்
x
தினத்தந்தி 20 Dec 2022 12:15 AM IST (Updated: 20 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை-வெப்பரை இடையே பழுதான சாலையால் வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர். அதை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை-வெப்பரை இடையே பழுதான சாலையால் வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர். அதை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பழுதான சாலை

ஆனைமலையில் இருந்து வெப்பரை பகுதிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையானது சுள்ளிமேட்டுப்பதி, எம்.ஜி.ஆர். நகர், காக்கா கொத்திப்பாறை, கே.பி.எம். காலனி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல பிரதான வழியாக உள்ளது. இங்கு தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. மேலும் அந்த சாலையில் தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு செல்லும் வாகனங்களும், ஆழியாற்றங்கரைக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களும் சென்று வருகின்றன. இதன் காரணமாக அந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஆனைமலையில் இருந்து வெப்பரை செல்லும் சாலை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் சாலையின் இருபுறமும் தெருவிளக்குகளும் கிடையாது. இதனால் பழுதான அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பரிதவிக்கும் நிலை உள்ளது.

தவறி விழுந்து காயம்

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சாலையில் புதிதாக 11-பி என்ற எண் கொண்ட அரசு பஸ் இயக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு சாலை மோசமானதால், அந்த பஸ் நிறுத்தப்பட்டது. ெதாடர்ந்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் எந்த நிர்வாகத்துக்கு உட்பட்ட சாலை என்று தெரியாமல் இருப்பதாக கூறி அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். அங்கு தெருவிளக்கு வசதி கூட இல்லை.

மேலும் பரவலாக மழை பெய்து வருவதால், அருகில் உள்ள தோட்டங்களில் இருந்து மழைநீரும் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளங்களில் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story