முதல்-அமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு அரசு - ரேனால்ட் நிஸ்ஸான் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்


முதல்-அமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு அரசு - ரேனால்ட் நிஸ்ஸான் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசு - ரேனால்ட் நிஸ்ஸான் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால், 2 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.5,300 கோடி முதலீடு மற்றும் 2 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசுக்கும் ரேனால்ட் நிஸ்ஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழ்நாடு இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிடும் வகையில், தமிழ்நாடு அரசு மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்து வருகிறது.

முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ள இலக்கான 2030-31-ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியடைய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

தற்போது, ரேனால்ட் நிஸ்ஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது முழு உற்பத்தி திறனான 4.80 லட்சம் கார்கள் உற்பத்தியில், 2 லட்சம் கார்கள் அளவுக்குத்தான் உற்பத்தி மேற்கொண்டு வருகிறது. ஆர்.என்.ஏ.ஐ.பி.எல். மற்றும் ஆர்.என்.டி.பி.சி.ஐ. நிறுவனங்கள், வாகன உற்பத்தி தளங்களை நவீன மயமாக்குவதற்கும், புதிய மாதிரிகளை அறிமுகப்படுத்தவும் முன்வந்துள்ளன.

அடுத்த 5 ஆண்டுகளில்...

தற்போதைய செயல்பாடுகளை விரிவுபடுத்துவது, அதாவது, உற்பத்தித் திறன் பயன்பாட்டை 2 லட்சம் கார்களில் இருந்து 4 லட்சம் கார்களாக விரிவுபடுத்துவது மற்றும் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு ஆகிய நோக்கங்களுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.5,300 கோடி முதலீடு செய்ய உள்ளது.

இதற்கான அரசாணையும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்டமாக, ரூ.5,300 கோடி முதலீடு மற்றும் 2 ஆயிரம் நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசுக்கும், ரேனால்ட் நிஸ்ஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

பங்கேற்றவர்கள்

இந்நிகழ்வில், உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு, சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டு தூதரகத்தின் துணைத்தூதர் டாகா மாசாயுகி, சென்னை மற்றும் புதுச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டு துணைத் தூதர் லிஸ் டால்போட் பர்ரே, நிஸ்ஸான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் கில்லாவுமா கார்டியர், தலைமை செயல் அலுவலர் அஸ்வினி குப்தா, நிஸ்ஸான் இந்தியா ஆப்பரேஷன்ஸ் தலைவர் பிராங்க் டாரஸ், ரேனால்ட் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வெங்கட் மிலாபாலே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story