தேசிய நலவாழ்வு குழுமம்- அப்பல்லோ ஆஸ்பத்திரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்


தேசிய நலவாழ்வு குழுமம்- அப்பல்லோ ஆஸ்பத்திரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
x

பிறவி இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தேசிய நலவாழ்வு குழுமம் மற்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி இடையே அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை,

தமிழ்நாட்டில் பிறவி குறைபாடு நோய் பதிவேடு நிறுவுதல் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான விரிவான பரிசோதனையை வலுப்படுத்துவதற்கான செயல் அமர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் நேற்று நடந்தது.

இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில், தேசிய நலவாழ்வு குழுமம் மற்றும் அப்பல்லோ குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு இடையே குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

சிறப்பு பயிற்சி

இதையடுத்து நிகழ்ச்சியில், மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

2022-23-ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையில், தமிழ்நாட்டில் முதன்முறையாக பிறவி இதய குறைபாட்டு நோய் பதிவேடு உருவாக்கவும் மற்றும் இளம் சிசு பிறவி இதய குறைபாட்டு நோய் கண்டறிவதை வலுப்படுத்த நவீன உபகரணங்கள் மற்றும் பயிற்சிகள் ரூ.22.43 கோடியில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணை கடந்த நவம்பர் மாதம் 24-ந்தேதி வெளியிடப்பட்டது.

பிறவி இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்ப கால இதய அறுவை சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவத்துறை மற்றும் அப்பல்லோ குழந்தைகள் ஆஸ்பத்திரியுடன் இணைந்து, இதய அறுவை சிகிச்சை அளிப்பதற்கும் மற்றும் 6 அரசு மருத்துவக்கல்லூரிகளில் (திருநெல்வேலி, மதுரை, சேலம், கோவை, திருவண்ணாமலை மற்றும் வேலூர்) உள்ள இதய மருத்துவ குழுவினருக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று மற்றொரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி

பிறவி இதய குறைபாட்டு நோய், பிளவு உதடு போன்ற வளர்சிதை மாற்ற கோளாறுகள் உள்பட 28 பெரிய மற்றும் 36 சிறிய அளவிளான பிறவி குறைபாடுகளை கண்டறிந்து விரிவான பரிசோதனை நடத்தவும் மற்றும் தமிழ்நாட்டில் பிறவி குறைபாடு கண்காணிப்பு மற்றும் பதிவேடு நிறுவவும் ஐ.நா.வின் 'யுனிசெப்' ஆதரவுடன் கருத்தரங்கம் 2 நாட்களாக நிகழ்த்தப்பட்டு வருகிறது.

இந்த செயலமர்வு கருத்தரங்கத்தில் குழந்தை மருத்துவம், இதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை உள்பட பல்வேறு துறைகளிலிருந்து 200 சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டார்கள்.

இந்த செயல் அமர்வு கருத்தரங்கத்தின் நோக்கங்களாக, பிறவி குறைபாடு கண்காணிப்பு மற்றும் பதிவேடில் தொடர்புடைய பங்குதாரர்களின் திறன் நுட்பங்களை மேம்படுத்துதல், பிறவி குறைபாடுகள் உள்ள குழந்தைகளை கண்டறிதல், சிகிச்சை அளித்தல் மற்றும் தொடர் கண்காணித்தல், திறமையான மனித வளம் மற்றும் மண்டல வாரியான பராமரிப்பு மையங்களை அடையாளம் காணுதல், அனைத்து பிரசவ மையங்களிலும், பிறந்த குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த விரிவான பரிசோதனை திட்டத்தை உருவாக்குதல், பிறவி குறைபாடு கண்காணிப்பு மற்றும் பதிவேடில், சிகிச்சை மற்றும் கண்காணிப்பு தளத்துக்கான செயல்முறையை மேம்படுத்துதல் போன்ற ஆக்கப்பூர்வமான விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்துகொண்டோர்

நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச்செயலாளர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதிஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் டாக்டர் சி.செல்வவிநாயகம், மருத்துவக்கல்வி இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் சாந்திமலர், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல குழுத்தலைவர் துரைராஜ், 'யுனிசெப்' தலைவர் டாக்டர் கே.எல்.ராவ், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் முத்துக்குமார், நிவில்சாலமன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story