ஆராய்ச்சி பரிமாற்றத்துக்காக ரஷிய பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்


ஆராய்ச்சி பரிமாற்றத்துக்காக ரஷிய பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
x

ஆராய்ச்சி பரிமாற்றத்துக்காக ரஷிய பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக நிறுவனர் ஏ.சி.சண்முகம் தகவல்.

சென்னை,

கல்வி மற்றும் மருத்துவத்துறையில் ஆற்றிவரும் சேவைகளை பாராட்டும் விதமாக, டாக்டர் எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலைக்கழக நிறுவனர் ஏ.சி.சண்முகத்துக்கு ரஷியாவின் 'குர்ஸ்க்' மாநில மருத்துவ பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்தது. அதன்படி, அந்த பல்கலைக்கழகத்தின் 88-வது ஆண்டுவிழாவிலும், அங்கு நாசிக் படை வெளியேறிய 80-வது ஆண்டு நினைவுதினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியிலும் ஏ.சி.சண்முகம் கலந்துகொண்டார்.

இந்தநிலையில் ரஷியாவின் 6 நாள் சுற்றுப்பயணம் குறித்து ஏ.சி.சண்முகம் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

'குர்ஸ்க்' பல்கலைக்கழக அழைப்பை ஏற்று, அங்கு சென்ற எனக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். முதலில் குர்ஸ்க் மாநிலத்தில் உள்ள 12 பல்கலைக்கழக வேந்தர்கள் பங்கேற்ற கல்வியாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு, இந்திய நாட்டின் கல்வி மற்றும் புதிய தேசிய கல்விக்கொள்கை குறித்து பேசினேன். பின்னர் அங்குள்ள மாநில சட்டமன்ற அவையில், உறுப்பினர்கள் முன்னிலையில் பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்தும் சிறப்பித்தனர்.

ஆராய்ச்சி, மாணவர்கள், ஆசிரியர்கள் பரிமாற்றத்துக்காக குர்ஸ்க் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது. மேலும், குர்ஸ்க் பல்கலைக்கழகத்தின் உயரிய 'பெல்லோஷிப்' சான்றிதழும் எனக்கு வழங்கி கவுரவித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அவரிடம், ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, 'அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து 2 நாட்கள் பிரசாரம் செய்ய இருக்கிறேன். என்ன தேதியில் பிரசாரம் என்பது விரைவில் தெரியவரும். இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட் பாளர் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது' என்றார்.


Next Story