மழைநீர் தேங்கும் சாலையால் மலைவாழ் மக்கள் அவதி
பொன்னானி-கொளப்பள்ளி இடையே மழைநீர் தேங்கும் சாலையால் மலைவாழ் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
பந்தலூர்
பொன்னானி-கொளப்பள்ளி இடையே மழைநீர் தேங்கும் சாலையால் மலைவாழ் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
தார்சாலை
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள பொன்னானியில் இருந்து பந்தப்பிளா, அம்மன்காவு வழியாக கொளப்பள்ளிக்கு தார்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மட்டுமின்றி அத்தியாவசிய, அவசர தேவைக்கு செல்லும் பொதுமக்கள் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
அதில், வனவிளைபொருட்களை தலைச்சுமையாக ஏற்றிக்கொண்டு நடந்து வரும் மலைவாழ் மக்களும் உண்டு. மேலும் பச்சை தேயிலை உள்பட விவசாய விளைபொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள், விவசாய இடுபொருட்களை ஏற்றி வரும் வாகனங்களும் இந்த சாலையில் சென்று வருகின்றன.
தேங்கும் மழைநீர்
இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் அந்த சாலை புதுப்பிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால், பழுதடைய தொடங்கியது. குறிப்பாக அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களால் சாலை பெயர ஆரம்பித்தது. இதனால் ஆங்காங்கே குழிகள் உருவாகி, அதில் மழைநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் வாகனங்களும் சில நேரங்களில் நடுவழியில் பழுதாகி நிற்கும் நிலை உள்ளது.
சீரமைக்க வேண்டும்
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில், பொன்னானியில் இருந்து கொளப்பள்ளிக்கு செல்லும் சாலையானது சுற்றுவட்டார மக்களுக்கு பயன்படும் முக்கிய சாலையாக உள்ளது. ஆனால் அந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அதில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.
அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மீது வாகனங்கள் மழைநீரை பீய்ச்சியடித்து செல்லும் நிலை உள்ளது. அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை விரைவாக ஊருக்குள் ஓட்டி செல்ல முடியவில்லை. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.