புதிய பெட்டிகளுடன் மலைரெயில் இயக்கம்


புதிய பெட்டிகளுடன் மலைரெயில் இயக்கம்
x
தினத்தந்தி 16 July 2023 1:30 AM IST (Updated: 16 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே புதிய பெட்டிகளுடன் சிறப்பு மலைரெயில் இயக்கப்பட்டது. இதனை மத்திய மந்திரி எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே புதிய பெட்டிகளுடன் சிறப்பு மலைரெயில் இயக்கப்பட்டது. இதனை மத்திய மந்திரி எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மலைரெயில்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள ரெயில் நிலையம் 150 ஆண்டுகள் பழமையானது. இங்கிருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலைரெயிலில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் காட்சிகள், வனப்பகுதியில் சுற்றித்திரியும் வனவிலங்குள், தேயிலை தோட்டங்கள், அருவி உள்ளிட்டவற்றை கண்டு ரசித்து வருகின்றனர்.

இதனல் மலைரெயிலில் பயணம் செய்ய உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பழமை வாய்ந்த இந்த மலை ரெயிலை 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.

புதிய தொழில்நுட்பத்தில்

ரெயில் பெட்டிகள்

இந்த நிலையில் பெரம்பூர் இணைப்பு தொழிற்சாலையில் புதிய தொழில்நுட்பத்துடன் 28 மலை ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. மேலும் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் ரூ.1¼ கோடியில் ஒருங்கிணைந்த முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா பயண சீட்டு வழங்கும் மையம் கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை மந்திரி எல்.முருகன் காலை மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்துக்கு வந்தார். அவருக்கு ரெயில்வே துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிறப்பு மலைரெயில் சேவை

பின்னர் மத்திய மந்திரி எல்.முருகன், நீலகிரி மலைரெயிலை பாரம்பரிய சின்னமாக அறிவித்து 18 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி சுற்றுலா பயணிகளுக்கு வழங்கினார். பின்னர் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இயக்கப்படும் சிறப்பு மலைரெயிலில் புதிதாக தயாரிக்கப்பட்ட பெட்டிகள் இணைக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு மலைரெயில் சேவையை மத்திய மந்திரி எல்.முருகன், ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சிறப்பு மலைரெயிலில் பயணிகள் உற்சாகத்துடன் பயணம் செய்தனர்.

அதனைத்தொடர்ந்து ரெயில் நிலைய வளாகத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் மற்றும் கல்வெட்டை மத்திய மந்திரி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

வேகமாக முன்னேறுகிறது

தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு மத்திய மந்திரி எல்.முருகன் தலைமை தாங்கி பேசியதாவது:-

பிரதமர் மோடியின் ஆட்சியில் ரெயில்வே துறை மிகவும் வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது. நமது நாட்டில் உள்ள ரெயில் நிலையங்களை உலக தரம் வாய்ந்த ரெயில் நிலையங்களாக மாற்றிட பிரதமர் மோடி தனி கவனம் செலுத்தி சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

கடந்த 2009-2014 ம் ஆண்டுகளில் தமிழகத்துக்கு மட்டும் ரூ.800 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த நிதியாண்டில் தமிழ்நாட்டுக்கு மட்டும் ரூ.6000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர தமிழகத்தில் மட்டும் 9 புதிய ரெயில் தடங்கள் தொடங்கப்பட்டுள்ளது. ரெயில் நிலைய மேம்பாட்டுக்காக அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி ரெயில் நிலையங்களுக்கு தலா ரூ.10 கோடி வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவை-மேட்டுப்பாளையம் ரெயிலில்

கூடுதல் பெட்டிகள்

நிகழ்ச்சியில் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ. பேசுகையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு 8 பெட்டிகளுடன் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைத்து 12 பெட்டிகளுடன் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மந்திய மந்திரியிடம் போரிக்கை வைத்தார்.

அப்போது, மத்திய மந்திரி எல்.முருகன் இந்த கோரிக்கை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.நிகழ்ச்சியில் சேலம் கோட்ட முதுநிலை எந்திரவியல் பொறியாளர் பரிமளநாதன், வணிக மேலாளர் பூபதி ராஜன், நீலகிரி மலைரெயில் துணை இயக்குனர் சுப்பிரமணி, தாசில்தார் சந்திரன் மற்றும் ரெயில்வே துறை உயர் அதிகாரிகள், பா.ஜ.க. பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா வரவேற்றார். முடிவில் ரெயில்வே கோட்ட உதவி மேலாளர் சிவலிங்கம் நன்றி கூறினார்.


Next Story