மலைரெயில் சேவை மீண்டும் தொடங்கியது
தண்டவாள சீரமைப்பு பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, மலைரெயில் சேவை மீண்டும் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேட்டுப்பாளையம்
தண்டவாள சீரமைப்பு பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, மலைரெயில் சேவை மீண்டும் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மண்சரிவு
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த 13-ந் தேதி இரவில் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன. இது தவிர மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் தண்டவாளம் சேதம் அடைந்தது. இதையொட்டி மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் சேவையை 14-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் ரத்து செய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்
மகிழ்ச்சி
இந்த நிலையில் மலைரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் பொறியாளர்கள் மேற்பார்வையில் ரெயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து ரெயில் பாதையை சீரமைக்கும் பணி நேற்று மாலை முடிவடைந்தது. இதையடுத்து மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் சேவை 5 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கியது. இதையொட்டி சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் ஆர்வத்துடன் காலை முதலே ரெயில் நிலையத்திற்கு வர தொடங்கினர். தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வழக்கம்போல் காலை 7.10 மணிக்கு 180 சுற்றுலா பயணிகளுடன் மலைரெயில் புறப்பட்டு சென்றது. அதில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.