மலைரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது


மலைரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது
x

மலைரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

அழகிய மலை ரெயில்

மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.130 ஆண்டுக்கும் மேல் பழமை வாய்ந்த மலைரெயிலை யுனஸ்கோ நிறுவனம் கடந்த 2005-ம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. மலைரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், பர்லியாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 4-ந் தேதி இரவு பெய்த மழை காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் பாதையில் கல்லாறு-ஹில்குரோவ் ரெயில் நிலையங்களிடையே மண் சரிவு ஏற்பட்டு ரெயில் பாதையில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன. மண் சரிந்து ரெயில் பாதையை மூடியது.

ராட்சத பாறைகள்

இதன் காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மற்றும் ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரெயில் போக்குவரத்து சேவையை கடந்த 5-ந் தேதி, 6-ந் தேதி ஆகிய 2 நாட்கள் ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்தது. இதனை தொடர்ந்து ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் குன்னூர் மலை ரெயில் இருப்புப் பாதை பொறியாளர் மேற்பார்வையில் ரெயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

ரெயில் பாதையில் விழுந்து கிடந்த ராட்சத பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன. சிதறிய பாறைகள் மற்றும் பாதையை மூடி இருந்த மண் அகற்றப்பட்டது. சேதமடைந்த ரெயில் தண்டவாளம் மற்றும் ராக் பார்கள் அகற்றப்பட்டு புதிதாக பொருத்தப்பட்டு பாதையை சீரமைக்கும் பணி நேற்று முன்தினம் மாலை முடிவடைந்தது.

மீண்டும் போக்குவரத்து

இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு பின்னர்மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து சேவை மீண்டும் நேற்று தொடங்கியது. மலை ரெயில் சேவை தொடங்கும் என்று ரெயில்வே நிர்வாகம் முன்னறிவிப்பு எதுவும் செய்யாததால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து வழக்கம் போல் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் மலை ரெயில் சுமார் அரை மணி நேரம் தாமதமாக காலை 7.35 மணிக்கு புறப்பட்டது. 180 சுற்றுலாப்பயணிகள் செல்லும் மலை ரெயிலில் 120 சுற்றுலா பயணிகள் இருந்தனர்.



Next Story