மின்வழிப்பாதையில் ரெயில்கள் இயக்கம்
மதுரை-ராமநாதபுரம் இடையே ரெயில் மின்வழிப்பாதை முடிந்து சரக்கு ரெயில்கள் மட்டுமே சென்று வந்த நிலையில் தற்போது பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது
மின் ரெயில்பாதை திட்டம்
மதுரை-ராமேசுவரம் இடையேயான 161 கிலோ மீட்டர் ரெயில்பாதை மின்பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டது. முதல்கட்டமாக மதுரை-ராமநாதபுரம் இடையே 107 கிலோ மீட்டர் ரெயில்பாதை மின்பாதையாக மாற்றபட்டுள்ளது. 9.5 மீட்டர் உயரம் முதல் 10.6 மீட்டர் உயரத்திலான மின்கம்பங்கள் அமைத்து மின்கேபிள்கள் பதிக்கப்பட்டன. சமயநல்லூர் பகுதியில் இருந்து மின்சப்ளை செய்யப்பட்டு அதன்மூலம் முதல்கட்டமாக ராமநாதபுரம் வரை சரக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது.
இந்த மின்பாதைக்காக மாமதுரை மற்றும் ராமநாதபுரத்தில் உயர்மின்அழுத்த துணை மின்நிலையம் அமைக்கப்பட்டு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதனிடையே ராமநாதபுரம் முதல் மண்டபம் வரையில் மின்வழிப்பாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்காலிக நிறுத்தம்
உச்சிப்புளி கடற்படை விமான தளத்தை கடந்து செல்லும் பகுதியில் 459 மீட்டர் தூரத்திற்கு அதிக மின்அழுத்த கம்பி செல்ல வேண்டி உள்ளதால் விமானங்கள் இறங்குவதற்கும், பாதுகாப்பு தகவல் தொடர்பு சிக்னல் பெறுவதிலும் மின்கம்பிகளால் பிரச்சினை ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் மின்கம்பிகளை அமைக்காமல் செல்லவோ அல்லது மாற்றுப்பாதை அமைக்கவோ அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே மின்பாதை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 50 மீட்டர் தூரம் என்றால் மின்பாதை இல்லாமல் கடந்து சென்றுவிட முடியும் என்றும் அரை கிலோ மீட்டர் என்பதால் அதற்கான வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களினால் பயணிகள் ரெயில் ராமநாதபுரம் வழியாக மின்பாதையில் இயக்கப்படாமல் இருந்து வந்தது.
மின்பாதையில் இயக்கம்
இந்நிலையில் பாம்பன் பால பணிகள் காரணமாக பல ரெயில்கள் ராமநாதபுரம் ரெயில்நிலையத்தில் இருந்து செல்வதால் பயணிகள் ரெயிலை மின்பாதையில் இயக்க முடியும் என்பதால் ராமநாதபுரம்-செகந்திராபாத், ராமநாதபுரம்-கோவை ரெயில்களை முதல்கட்டமாக மின்பாதையில் இயக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி கோவையில் இருந்து நேற்று முன்தினம் இரவு மின்பாதையில் ரெயில் வந்தது. இந்த ரெயில் நேற்று இரவு கோவைக்கு மின்பாதையில் சென்றது. சென்னை ரெயில்கள் மண்டபத்தில் இருந்து இயக்கப்படுவதால் அதனை என்ஜின் மாற்றி இயக்க வசதி இல்லாததால் மின்பாதையில் இயக்க தற்போதைக்கு வாய்ப்பு இல்லை என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.