தியேட்டரில் படம் பார்க்கும் ஆசையே போய்விடுமோபொதுமக்கள், மாணவி கருத்து
தின்பண்டங்கள் விலை உயர்வால் தியேட்டரில் படம் பார்க்கும் ஆசையே போய்விடுமோ என பொதுமக்கள், மாணவி கருத்து தெரிவித்துள்ளனர்.
சினிமா தியேட்டர்கள் ஏழை, எளிய மக்களின் பொழுதுபோக்கு அரங்கம் என்று சொல்லப்படுவது உண்டு. ஆணும், பெண்ணும் குழந்தையும் குட்டியுமாக கிளம்பி திருவிழாவிற்குப் போவது போல் தியேட்டர்களுக்கு போவார்கள். இப்போது அந்த ஆர்வமும், ஆசையும் இருந்தாலும்கூட அந்த மக்களால் சினிமா தியேட்டர்களுக்கு போகமுடியுமா என்று கேட்டால், முடியாது என்றே சொல்லத் தோன்றுகிறது.
மயக்கம் தரும் விலை
அந்த அளவில் தியேட்டர்கள் சாதாரண, சாமன்ய மக்களின் பட்ஜெட்டுக்கு உகந்ததாக இல்லை. டிக்கெட்டுகள் ஒருபுறம் இருந்தாலும், அங்கு உள்ள கேன்டீன்களில் விற்கப்படும் உணவுப் பண்டங்களின் விலைகளைக் கேட்டால் மயக்கம் போட்டுதான் விழ வேண்டும். நாம் கொண்டுபோகும் தின்பண்டங்களையும் அனுமதிக்க மாட்டார்கள். இதனால் தியேட்டருக்கு குடும்பத்தோடு சினிமாவுக்குப் போகவேண்டும் என்ற ஆசை அடியோடு அற்றுப்போகிறது.
என்ன நியாயம்?
இதுபற்றி விசாரித்தால், ''தியேட்டர் பராமரிப்புச் செலவு அதிகமாகிறது. டிக்கெட் கட்டணம் அரசு நிர்ணயிப்பதால் அதை உயர்த்த முடியவில்லை. தின்பண்டங்களின் விலைகளை அதிகமாக வைத்திருக்கிறோம். யாரையும் கட்டாயப்படுத்தி தின்பண்டங்கள் வாங்கச் சொல்வது இல்லை'' என்கிறார்கள்.
நாம் கொண்டுபோகும் தின்பண்டங்களைப் பிடுங்கிவைத்துக் கொண்டு இவ்வாறு சொல்வது என்ன நியாயமோ? தெரியவில்லை. சினிமா தொழிலுக்கு மூலதனமே அதைப் பார்க்கவரும் ரசிகர்கள்தான் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.
இதுபற்றி பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் ஆதங்கங்கள், கருத்துகள் வருமாறு:-
பாரம்பரிய தின்பண்டங்கள் இல்லை
எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்த ரமேஷ்:-
பாரம்பரிய தின்பண்டங்களான தேன் மிட்டாய், கமர்கட், எள்ளுரண்டை, கடலை மிட்டாய் போன்ற எதுவும் தற்போது தியேட்டர்களில் கிடைப்பதில்லை. அதேபோல் காபி, டீ, குளிர்பானங்கள், சமோசா போன்றவையும் வெளியில் விற்பனை செய்யும் விலையை விட அதிக விலைக்கு தான் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது வெளி வரக்கூடிய படங்கள் 20 நாட்களுக்குள் ஓ.டி.டி.யில் வந்து விடுகிறது. இந்த சூழ்நிலையில் தியேட்டர்களில் படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே ரசிகர்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள, தேவையான வசதிகளை தியேட்டர் நிர்வாகத்தினர் செய்து, தின்பண்டங்களின் விலையை குறைக்க வேண்டும். இல்லை எனில் சினிமா தியேட்டர்களை திருமண மண்டபங்களாக மாற்றும் நிலை உருவாகிவிடும்.
திருவிழாவுக்கு செல்வது போல..
கந்தம்பாளையத்தை சேர்ந்த குணமணி:-
நான் சிறு பிள்ளையாக இருந்தபோது சினிமா பார்க்க திருவிழாவுக்கு செல்வது போல செல்வோம். அங்கு உடலுக்கு ஆரோக்கியமான சுண்டல், வேர்க்கடலை, கடலை மிட்டாய், சுக்குகாப்பி போன்றவை விற்பனை செய்யப்படும். அவற்றை வாங்கி விரும்பி சாப்பிடுவோம். ஆனால் தற்போது திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் தின்பண்டங்கள் விலையும் உயர்வு, ஆரோக்கியமாகவும் இருப்பதில்லை. இதனை வாங்கி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பதுடன், செலவையும் கட்டுப்படுத்துவதற்காக எதையும் திரையரங்குகளில் வாங்குவதில்லை.
மேலும் நாகரிகம் வளர்ந்து விட்ட காரணத்தால் தற்போது திரையரங்குகளில் பீசா, பர்கர், பாப்கார்ன், குளிர்பானங்கள் போன்றவை அநியாயமான விலையில் விற்கப்படுகிறது. ஆரோக்கியமான உணவு மற்றும் நவதானிய பொருட்களை பாக்கெட்டுகளில் அடைத்து நியாயமான கட்டணத்தில் வழங்கினால் தொடர்ந்து திரையரங்கு பக்கம் அதிக அளவில் பொதுமக்கள் வருவார்கள்.
ஆசையே போய் விடுகிறது
வெண்ணந்தூரை சேர்ந்த கல்லூரி மாணவி சவுமியா:-
திரையரங்குகளில் தின்பண்டங்கள், குளிர்பானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதால், நான் திரைப்படம் பார்க்க செல்வதற்கு முன்பாக பசிக்காத அளவிற்கு வீட்டிலேயே திருப்தியாக சாப்பிட்டுவிட்டு சென்று விடுவேன். மேலும் சிலர் திரையரங்குக்கு அருகில் உள்ள உணவு விடுதிகளில் பரோட்டா சாப்பிட்டு விட்டு திரையரங்குகளுக்கு வருவதை காண முடிகிறது.
அவர்களுக்கு பசி ஏற்படுவது இல்லை. எனவே அவர்கள் இடைவேளையில் எதுவும் வாங்க மாட்டார்கள். நானும் நொறுக்குதீனி எதுவும் வாங்குவது இல்லை. விலையை குறைத்தால் தின்பண்டங்களை வாங்கி அனைவரும் சாப்பிடுவார்கள். வெளியில் இருந்து தின்பண்டங்கள் கொண்டு வரவும் அனுமதிப்பது இல்லை. இவ்வாறு செய்வதால் திரையரங்குகளில் சென்று சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆசையே போய் விடுகிறது.
சுத்தமாகவும், சுகாதாரமாகவும்
திருச்செங்கோட்டை சேர்ந்த தியேட்டர் உரிமையாளர் குணசேகரன்:-
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் மல்டிபிளக்ஸ் மற்றும் பல்வேறு வசதிகள் கொண்ட தியேட்டர்கள் இயங்கி வருகின்றன. அந்த தியேட்டர்களில் பாப்கார்ன், பப்ஸ், டீ, காபி, பர்கர், பிரைஞ்ச் பிரைஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான தின்பண்டங்கள், குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை அதிக விலை என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் பெரு நகரங்களை ஒப்பிடுகையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் கட்டணமும் சரி, தின்பண்டங்களும் நியாயமான விலைகளில் விற்பனை செய்கிறோம். மாவட்டத்தில் பாப்கார்ன் ரூ.30-க்கும், பப்ஸ், டீ, காபி போன்றவை ரூ.20-க்கும், ஐஸ்கிரீம் ரூ.25 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
திரையரங்குகளுக்குள் வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளை அனுமதிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை பின்பற்றுகிறோம். அதே நேரத்தில் தண்ணீர் மற்றும் குழந்தைகளுக்கான பால் போன்றவை எடுத்து வருபவர்களை அனுமதிக்கிறோம். டிக்கெட் விற்பனை செய்யும் போது பாப்கார்ன் கண்டிப்பாக வாங்கித்தான் ஆக வேண்டும் என்று யாரையும் நாங்கள் நிர்ப்பந்திப்பது இல்லை. அவர்களாக தான் சென்று வாங்கிக் கொள்கின்றனர். மேலும் திரையரங்குகளை அரசு விதிகளின் படியும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பேணி வருகிறோம்.
நிர்ப்பந்தம் செய்வது இல்லை
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணைச் செயலாளர் எஸ்.ஸ்ரீதர் கூறும் போது, 'திரையரங்குகளுக்குள் வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளை அனுமதிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை பின்பற்றுகிறோம். அதேபோல் சொத்து வரி, குடிநீர் வரி, மின்சார கட்டணம் உள்ளிட்ட செலவினங்கள் அதிகரிப்பதால் அதற்கு ஏற்ற வருவாயை தேடிக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். இடைவேளையில் விற்கப்படும் பாப்கானை பொறுத்த வரையில் சென்னையில் ரூ.400, ரூ.200, ரூ.150 என்ற விலையிலும், டிக்கெட் கட்டணத்தை பொறுத்தவரையில் ரூ.10, ரூ.70 மற்றும் ரூ.146 என்ற நிலையிலும் இருக்கிறது. பொதுமக்கள் தங்கள் வசதிக்கு தகுந்தவாறு வாங்கிக் கொள்ளலாம். சென்னையைவிட்டு பிற மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் பாப்கார்ன் ரூ.30 அதிகபட்சமாக ரூ.40 கட்டணத்தில்தான் விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட் விற்பனை செய்யும் போது பாப்கான் கண்டிப்பாக வாங்கித்தான் ஆக வேண்டும் என்று யாரையும் நாங்கள் நிர்ப்பந்திப்பது இல்லை. அவர்களாகத்தான் சென்று வாங்கிக் கொள்கின்றனர். திரையரங்குகளில் பாப்கார்ன் மட்டும் அப்படி விற்பதில்லை, ரெயில் டிக்கெட் கவுண்ட்டரில் ஒரு கட்டணம், சாதாரணமாக ஆன்-லைனில் வாங்கினால் ஒரு கட்டணம், தட்கல் மற்றும் பிரிமியம் தட்கல் என்ற வகையில் கட்டணங்கள் மாறுபடுகிறது. செலவினங்களுக்கு ஏற்ப வருவாயை பெருக்கிக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது' என்றார்.
அரசு வசம் ஆன்லைன் டிக்கெட்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன் கூறும் போது, 'திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பண்டங்கள் அவர்கள் வாங்கும் விலையில் இருந்து 70 சதவீதம் மிக, மிக அதிகமாக அநியாய விலையில் விற்கின்றனர். வெளியில் இருந்து உணவு பொருட்களை கொண்டுவரக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவால் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு திரையரங்கு பக்கமே வருவதில்லை. அதிலும் குறிப்பாக பெரிய படங்களாக இருந்தால் திரையரங்குகளுக்கு வருகிறார்கள், சிறிய படங்களாக இருந்தால் எவரும் எட்டிக்கூட பார்ப்பதில்லை. டிக்கெட்டுகளும் ரூ.100-க்கு பதிலாக ரூ.400, ரூ.500 என்று விற்கப்படுகிறது. ஆன்லைன் கட்டணம் என்று ஒரு டிக்கெட்டுக்கு ரூ.40 கூடுதலாக வசூலிக்கின்றனர். 5 டிக்கெட் என்றால் ஆன்லைன் கட்டணம் ரூ.200 கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கிறது. இதனை திரையரங்கை சேர்ந்தவர்களும், ஆன்லைன்காரர்களும் பகிர்ந்து கொள்கின்றனர். வாகனம் நிறுத்துவதற்கு 1 மணி நேரத்திற்கு ரூ.50 கட்டணம், பாப்கார்ன் உள்ளிட்ட தின்பண்டங்கள், டீ, காபி செலவுகளுக்கு தனியாக ரூ.500 வேண்டும். மொத்தத்தில் ரூ.2 ஆயிரம் இல்லாமல் ஒரு குடும்பத்தினரால் திரையரங்குக்கு வரமுடியாது என்ற நிலை உருவாகி உள்ளது. இதனால் திருட்டு சிடி அதிகரித்து சினிமா தொழிலே நசுங்கி வருகிறது. தொழிலை மேம்படுத்த ஆன்லைன் டிக்கெட் விற்பனை தனியாரிடம் இல்லாமல் அரசு வசம் கொண்டு வந்து அவற்றை முறைப்படுத்த வேண்டும். தின்பண்டங்கள் விலை, வாகன நிறுத்தும் கட்டணம் உள்ளிட்டவற்றை திரையரங்குகளில் குறைக்க வேண்டும்' என்றார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.