எழும்பூர்-கடற்கரை இடையே 4-வது வழித்தட பணி: சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்


எழும்பூர்-கடற்கரை இடையே 4-வது வழித்தட பணி: சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்
x

எழும்பூர்-கடற்கரை இடையிலான 4-வது வழித்தட ரெயில் பாதை திட்டம் காரணமாக நேற்று முதல் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டதால் சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

சென்னை

4-வது வழித்தடம்

சென்னை எழும்பூர்-கடற்கரை இடையே 4-வது ரெயில் பாதை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று ரூ.279 கோடி மதிப்பில் சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய ரெயில் பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இதன் காரணமாக, கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை வரையில் மின்சார ரெயில் சேவை 27-ந் தேதி முதல் அடுத்த 7 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இந்த நிலையில், நேற்று முதல் இந்த புதிய ரெயில் சேவை மாற்றம் நடைமுறைக்கு வந்தது. இதனால், வேளச்சேரி சிந்தாதிரிப்பேட்டை வரையில் மட்டுமே ரெயில்கள் இயக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி, ஆவடி, அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரிக்கு செல்ல வேண்டிய 59 மின்சார ரெயில் சேவைகள் கடற்கரை வரை மட்டுமே இயக்கப்பட்டது.

ரெயில் சேவை ரத்து

கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. சென்னை கடற்கரை, கோட்டை, சென்டிரல் உள்ளிட்ட ரெயில் நிலையங்களுக்கு செல்பவர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் இறங்கி பஸ்கள் மூலம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

பயணிகளின் வசதிக்காக சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலைய வளாகத்தில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது. குறிப்பாக, 140 பஸ் சேவைகள் சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்திலிருந்து சென்னை சென்டிரல், பிராட்வே மற்றும் கடற்கரை வழியாக வள்ளலார் நகர் வரை செல்லும் வகையில் இயக்கப்பட்டது.

பயணிகள் அவதி

இதேபோல் அண்ணா சாலை வழியாக பிராட்வே செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் சிம்சன் சிக்னலில் இருந்து இடது புறம் திரும்பி சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

குறிப்பாக, வேளச்சேரி-கடற்கரை இடையே நாள் ஒன்றுக்கு 122 மின்சார ரெயில் சேவை இயக்கப்பட்ட நிலையில், தற்போது சிந்தாதிரிப்பேட்டை-வேளச்சேரி இடையே மட்டுமே இனி 15 நிமிடங்களுக்கு ஒருமுறை என நாள் ஒன்றுக்கு 80 மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் விடுமுறையை கொண்டாட பல்வேறு பகுதிகளில் இருந்து மெரினா கடற்கரை வந்த பயணிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். இதேபோல, அலுவலகம் செல்பவர்கள் வேலையை முடித்துவிட்டு குறிப்பிட்ட நேரத்தில் வீடுகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-

கருத்து கேட்கவில்லை

கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த சோமு மற்றும் பிரியா கூறுகையில்,

'எங்களுடைய மகள் திருவண்ணாமலையில் படிக்கிறாள். மாதம் ஒருமுறை மகளை பார்ப்பதற்காக சென்டிரல் ரெயில் நிலையத்தில் இறங்கி சென்று வருவோம். ஆனால், இப்போது சிந்தாதிரிப்பேட்டை வரை மட்டுமே இயக்கப்படுவதால் மாறி, மாறி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால், மிகவும் சிரமாக உள்ளது. பஸ் சேவை இயக்கப்பட்டாலும் தேவையான நேரத்திற்கு கிடைப்பதில்லை' என்றனர்.

பெரும்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் கூறுகையில்,

'மக்களிடம் எந்தவித கருத்தும் கேட்காமல் திடீரென ரெயில் சேவையை ரத்து செய்திருப்பது கவலை அளிக்கிறது. இதனால், வயதானவர்களும், பெண்களும் மிகவும் அவதி அடைகிறார்கள். சக்கர நாற்காலி வசதி கூட இங்கு இல்லை. போதிய கழிவறை வசதி இல்லை. பள்ளி, கல்லூரி மற்றும் அன்றாட வேலை செல்வோர் எப்படி குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியும்? எனவே, மக்களிடம் கருத்து கேட்டபின்னர் ரெயில் சேவையை ரத்து செய்திருக்க வேண்டும்' என்றார்.

பயண நேரம் அதிகம்

பொன்னேரியை சேர்ந்த மாதவன் கூறுகையில்,

'பொன்னேரியில் இருந்து நாள்தோறும் ரெயில் மூலம் வேலைக்காக திருவான்மியூர் செல்வேன். பெரும்பாலும் பஸ்களை நான் பயன்படுத்துவது இல்லை. கடற்கரையில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை வரை ரெயில் சேவையை ரத்து செய்திருப்பதால் என்னுடைய பயண நேரத்தை அதிகரித்துள்ளது. பஸ்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு கிடைப்பதில்லை' என்றார்.


Next Story