தஞ்சாவூர் வேளாண்மை கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்: சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு


தஞ்சாவூர் வேளாண்மை கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்: சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு
x

தஞ்சாவூர் வேளாண்மை கல்லூரி இனி ‘டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்' என்று அழைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை,

இந்தியா முழுவதும் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கும், இந்திய மக்களின் பட்டினிச்சாவைத் தடுப்பதற்கும் 1960 களில் பசுமைப் புரட்சித் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியவர் மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன். வேளாண் அறிவியலை இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு ஏற்றவாறு பயன்படுத்தும் பல்வேறு ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக நிகழ்த்திக்காட்டி உலகளவில் புகழ் பெற்றவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

தமிழ்நாட்டில் கருணாநிதி ஆட்சியில் வேளாண் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு, வேளாண் ஆராய்ச்சி மையங்கள் அதிகளவில் உருவாக்கப்பட்டு, உணவு உற்பத்தியில் புரட்சியும், அதனை அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதற்கான செயல்முறைத் திட்டமும் மேற்கொள்ளப்பட்டது. இன்றளவிலும் இந்தியாவின் வெற்றிகரமான மாடலாக இருப்பது கருணாநிதி ஆட்சிக் காலத்து மாடல்தான். இந்த பங்களிப்பில் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆலோசனைகளும் இணைந்திருக்கின்றன.

காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றம் தான் பெரிய பிரச்சினையாக மாறிக்கொண்டு இருக்கிறது. இதனை முன்கூட்டியே உணர்ந்து, காலநிலை மாற்றம் குறித்து 1969-ம் ஆண்டிலேயே இந்திய அறிவியல் மாநாட்டில் பேசி இருக்கிறார். உலகம் அதிகமாக வெப்பமாவதால் கடல் மட்டம் உயரும் என்பதையும் 1989-ம் ஆண்டு டோக்கியோ மாநாட்டில் எச்சரிக்கை விடுத்தார்.

கருணாநிதி மீது அளப்பரிய அன்பு கொண்டவரான எம்.எஸ்.சுவாமிநாதன், கருணாநிதி மறைவின் போது மிக உருக்கமான இரங்கற்குறிப்பையும் பதிவு செய்திருந்தார். தன்னுடைய பெயரிலான எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு கருணாநிதி நிலம் தந்து உதவியதையும், ஜே.ஆர்.டி. டாடா பெயரிலான சுற்றுச்சூழல் தொழில்நுட்ப மையத்தை ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுடன் இணைந்து கருணாநிதி திறந்து வைத்ததையும் நன்றி பெருக்குடன் பதிவு செய்துள்ளார்.

பாராட்டு

தமிழ்நாட்டிற்கான உயிரி தொழில்நுட்ப கொள்கையை உருவாக்கியவர் கருணாநிதி தான் என்பதைக் குறிப்பிட்டுள்ள எம்.எஸ்.சுவாமிநாதன், கருணாநிதி ஆட்சி எப்போதும் விவசாயிகள் நலன் நாடும் ஆட்சியாகவே இருந்தது என்பதையும், விஞ்ஞானிகளின் விஞ்ஞானியாக கருணாநிதி திகழ்ந்தார் என்றும் பாராட்டியுள்ளார்.

2021-ல் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தபோது, அவருடைய பணிகளைப் பாராட்டிப் பேசினேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இன்றைய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும், இந்த அரசை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுள்ள முதல்-அமைச்சராகிய என்னையும் அவர் பாராட்டி, வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்கினார்.

பெயர் சூட்டல், விருது

பசுமைப் புரட்சியின் தந்தை என போற்றப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் 28-9-2023 அன்று மறைவெய்தியபோது அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதுடன், அரசின் சார்பில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன் இந்திய அளவில் முத்திரை பதித்து, உலகளவில் புகழ் பெற்றவர். பத்மவிபூஷன் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ள அவரது நினைவைப் போற்றுகிற வண்ணம் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிப்பை வெளியிடுகிறேன்.

தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி 'டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்' என்று அழைக்கப்படும். அதேபோல், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் வேளாண் அறிவியலில் பயிர்ப்பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று முன்னிலை பெறும் மாணவருக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஓ.எஸ்.மணியன் (அ.தி.மு.க.), செல்வபெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), வானதி சீனிவாசன் (பா.ஜ.க.), சதன் திருமலைக்குமார் (ம.தி.மு.க.), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு), சிந்தனை செல்வன் (விடுதலை சிறுத்தைகள்), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) ஆகியோர் வரவேற்பு தெரிவித்தனர்.


Next Story