பழனி முருகன் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, அர.சக்கரபாணி ஆகியோர் பங்கேற்றனர்.
பழனி முருகன் கோவில்
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில், கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு பிறகு 2018-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது.
பக்தர்களின் கோரிக்கையை தொடர்ந்து, கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் பாலாலய பூஜையுடன் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2 ஆண்டுகளாக திருப்பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் மீண்டும் தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் அறங்காவலர் குழு சார்பில், அடுத்த மாதம் (ஜனவரி) 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
இந்தநிலையில் பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்துக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக மலைக்கோவில் பாரவேல் மண்டபத்தில் காலை 9 மணிக்கு விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கலசபூஜை, முகூர்த்தக்கால் பூஜை, வேதபாராயணம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து வேத உபசாரங்கள், திருமுறை பாடப்பட்டு கலசங்கள், முகூர்த்தக்கால்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் பாரவேல் மண்டபத்தில் இருந்து உட்பிரகாரம் வந்து நவவீரர் சன்னதி முன்பு ஒரு முகூர்த்தக்காலும், யாகசாலை பூஜைக்காக கார்த்திகை மண்டபத்தில் உள்ள ஈசான மூலையில் மற்றொரு முகூர்த்தக்காலும் நடும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு முகூர்த்தக்கால்களை நட்டனர்.
சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்
அப்போது அங்கிருந்த பக்தர்கள் 'முருகனுக்கு அரோகரா' என சரண கோஷம் எழுப்பினர். அதையடுத்து முகூர்த்தக்கால்களுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து கோவில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து அமைச்சர்கள் சேகர்பாபு, அர.சக்கரபாணி ஆகியோர் ராஜகோபுர கலசத்துக்கு ரூ.22 லட்சத்தில் தங்க 'ரேக்' ஒட்டும் பணி மற்றும் ரூ.1 கோடியே 12 லட்சத்தில் கோவில் நீராழிபத்தி மண்டபத்தை சுற்றிய பகுதி, மகா மண்டப பகுதி, தங்க விமானத்தை சுற்றிய பகுதிகளில் பித்தளையால் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.
கும்பாபிஷேக பணி தீவிரம்
இந்த நிகழ்ச்சியில் வேலுசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காந்திராஜன், இ.பெ.செந்தில்குமார், மாவட்ட கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், கோவில் இணை ஆணையர் நடராஜன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், சத்யா, கோவில் துணை ஆணையர் பிரகாஷ், பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பூஜை நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணிம் மற்றும் குருக்கள் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அடுத்த மாதம் ஜனவரி 18-ந்தேதி கணபதி பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடைபெறுகிறது. 26-ந்தேதி பழனி கோவிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 27-ந்தேதி பழனி முருகன் கோவில் ராஜகோபுரம், தங்க விமானத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக திருப்பணிகளை கோவில் அலுவலர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.