கும்பாபிஷேகத்தை முன்னிட்டுசேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் விழாதிரளான பக்தர்கள் தரிசனம்


கும்பாபிஷேகத்தை முன்னிட்டுசேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் விழாதிரளான பக்தர்கள் தரிசனம்
x

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சேலம்

சேலம்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கோட்டை மாரியம்மன் கோவில்

சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் பல ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் நிறைவடைந்து வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கோவிலில் யாகசாலை அமைக்க முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று காலை நடந்தது. கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்.டி.என்.சக்திவேல் தலைமை தாங்கினார். இதில், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகூர்த்தக்கால் நட்டு வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அறங்காவலர் நியமன குழு தலைவர் கே.ஆர்.முருகன், கோட்டை மாரியம்மன் கோவில் அறங்காவலர்கள் ஜெய், ரமேஷ்பாபு, வினிதா, சுரேஷ்குமார், கோவில் செயல் அலுவலர் அமுதசுரபி, அம்மாப்பேட்டை மண்டலக்குழு தலைவர் தனசேகரன், தி.மு.க. பகுதி செயலாளர்கள் சாந்தமூர்த்தி, சரவணன், பிரகாஷ், கோவில் தலைமை பூசாரி சிவக்குமார், சிவாஜி மனோகர சிவம், வெங்கடேஷ் சிவம், கோட்டை பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேஸ்வரி மற்றும் மாவட்ட அறங்காவலர்கள், தொழில் அதிபர்கள், திருப்பணி உபயதாரர்கள், நன்கொடையாளர்கள், முக்கிய பிரமுகர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், யாகம் நடத்தி பூஜை செய்யப்பட்டது.

புதிய கொடிமரம் பிரதிஷ்டை

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற 6-ந் தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை புதிய கொடிமரம் பிரதிஷ்டை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 18-ந் தேதி காலை மகாகணபதி ஹோமம், முளைப்பாரி இடுதலும், 19-ந் தேதி காலை 6 மணிக்கு கணபதி வழிபாடு, கிராமசாந்தி, அஷ்ட பலி பூஜை நடக்கிறது.

24-ந் தேதி காலை 10.30 மணிக்கு விநாயகர் வழிபாடும், அதன்பிறகு சுகவனேசுவரர் கோவிலில் இருந்து புனித தீர்த்த குடம், முளைப்பாரி ஊர்வலம் தொடங்கி கோவிலுக்கு வருகிறது. 25-ந் தேதி மாலை 6 மணிக்கு முதற்கால யாகபூஜையும், 26-ந் தேதி காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜையும், 11 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் விமானங்களில் கலசங்கள் பொருத்துதல் நிகழ்ச்சியும், பிற்பகல் 3.15 மணி முதல் மாலை 5.30 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜையும், 27-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், 7.40 மணிக்கு ராஜகோபுரம், மூலஸ்தான விமானம், பரிவார சன்னதி, விமானம் மற்றும் கொடிமரத்திற்கு சமகாலத்தில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் மகா கணபதி, கோட்டை மாரியம்மன், மதுரை வீரன் சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

அன்னதானம்

இதுகுறித்து கோட்டை மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்.டி.என்.சக்திவேல் கூறுகையில், கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, யாகசாலை மற்றும் அன்னதானத்திற்கு தேவையான பொருட்களை பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்படும், என்றார்.


Next Story