முளைப்பாரி ஊர்வலம்
கோவில் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
திருப்புவனம்
திருப்புவனம் யூனியனை சேர்ந்த அல்லிநகரம், அ.வெள்ளக்கரை, அ.முத்துப்பட்டி, அ.காலனி ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும் கிராம பொதுமக்கள் அங்குள்ள ராஜமாகாளி அம்மனுக்கு முளைப்பாரி உற்சவ விழா நடத்த திட்டமிட்டனர். அதன்படி கடந்த 21-ந் தேதி அம்மனுக்கு தீர்த்தவாரி பூஜையுடன் விழா தொடங்கியது. 2-ம் நாள் விழாவாக முளைப்பாரிக்கு முத்து பரப்புதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
9-ம் நாள் விழாவாக முளைப்பாரிகளுடன் ஒயிலாட்டம், கும்மியாட்டத்துடன் மந்தை திடலுக்கு கொண்டு வந்தனர். 10-ம் நாள் விழாவாக நேற்று மந்தை திடலில் இருந்து முளைப்பாரிகளை பொதுமக்கள் தூக்கி வந்து தண்டீஸ்வரர் அய்யனார் கோவில் முன்பு வைத்து பூஜை நடைபெற்றது.
இதில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட முளைப்பாரிகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தெப்பக்குளத்தில் கரைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.