பட்டுப்புழு வளர்ப்பு மூலம் விவசாயிகள் கூடுதல் வருவாய் பெறலாம்- வேளாண் உதவி இயக்குனர்
பட்டுப்புழு வளர்ப்பு மூலம் விவசாயிகள் கூடுதல் வருவாய் பெறலாம் என வேளாண் உதவி இயக்குனர் கூறினார்.
திருவையாறு:-
பட்டுப்புழு வளர்ப்பு மூலம் விவசாயிகள் கூடுதல் வருவாய் பெறலாம் என வேளாண் உதவி இயக்குனர் சுஜாதா கூறினார்.
பட்டுப்புழு வளர்ப்பு
திருவையாறு அருகே புனவாசல் கிராமத்தில் திருவையாறு வட்டார அட்மா திட்டம் சார்பில் பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமை திருவையாறு வேளாண் உதவி இயக்குனர் சுஜாதா தொடங்கிவைத்து பேசுகையில், 'விவசாயிகள நல்ல வருவாய் தரக்கூடிய பட்டுப்புழு வளர்ப்பு மல்பெரி சாகுபடி ஆகியவற்றை சேர்த்து சாகுபடி செய்யும் போது கூடுதல் வருவாய் பெறலாம். மேலும் இதன் மூலம் வேலைவாய்ப்புக்கான உத்தரவாதத்துடன், மாற்று வருவாய்க்கான வழியும் கிடைக்கும்.
ஒரு ஊருக்கு ஒருவர் அல்லது 2 பேர் மல்பெரி சாகுபடி செய்யும் நிலை மாறி பல விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்ள முன்வர வேண்டும்.
பெண்கள் முன்னேற்றம்
அதிலும் குறிப்பாக பெண் விவசாயிகள் இந்த பட்டுப்புழு வளர்ப்பில் அதிகளவில் ஈடுபட்டு முன்னேற்றம் அடைய வேண்டும்' என்றார்.
முகாமில் பட்டு வளர்ச்சி துறை ஆய்வாளர் தீனதயாளன் விவசாயிகளுக்கு பட்டு வளர்ப்பு முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை வேளாண் அலுவலர் சிநேகா, வேளாண் உதவி அலுவலர்கள் வெங்கடேசன், ஐஸ்வர்யா, அட்மா திட்ட மேலாளர் சக்கரவர்த்தி, உதவி மேலாளர்கள் நெடுஞ்செழியன், மங்களேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்