பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
கடலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் இன்று (சனிக்கிழமை) பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது
கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கருணாநிதி நூற்றாண்டு விழா
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக மாவட்டந்தோறும் துறை வாரியாக பல்வேறு நலத்திட்ட முகாம்களை நடத்திட அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 100 இலவச பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை இன்று(சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
அதில் கடலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட ஆணை பெறப்பட்டுள்ளது. அதாவது பண்ருட்டி கொள்ளுக்காரன்குட்டை வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குள்ளஞ்சாவடி அரசினர் மேல்நிலைப்பள்ளி, காட்டுமன்னார்கோவில் ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி, திட்டக்குடி ஞானகுரு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் இந்த முகாம் நடக்கிறது.
புற்றுநோய் பரிசோதனை
இந்த அனைத்து முகாம்களிலும் சிறப்பு மருத்துவர்களை கொண்டு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தத்தில் உள்ள கொழுப்பு, உப்பு, சிறுநீர் பரிசோதனை மற்றும் பொது பரிசோதனை செய்யப்படும். மேலும் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனையும், குழந்தைகளுக்கான சிறப்பு சேவை, பொது அறுவை சிகிச்சை, கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு மருத்துவம், மன நல மருத்துவம், நரம்பியல், இருதய மருத்துவம், காசநோய் மற்றும் தொழுநோய் பரிசோதனை மற்றும் சிறப்பு சேவை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படும். இதில் நோய் உறுதி செய்யப்படும் அனைத்து நபர்களுக்கும் இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். தேவைப்படும் நபர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெற பதிவுபெற்ற மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்படும். எனவே இம்முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.