சேலத்தில் சொகுசு கார் திருட்டு வழக்கில் மும்பையை சேர்ந்த அண்ணன், தம்பி கைது
சேலத்தில் நடந்த சொகுசு கார் திருட்டு வழக்கில் மும்பையை சேர்ந்த அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
சொகுசு கார் திருட்டு
சேலம் அஸ்தம்பட்டி காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் மதன்குமார். அரிசி வியாபாரியான இவர், கடந்த மாதம் 5-ந் தேதி ரூ.20 லட்சம் மதிப்பிலான சொகுசு காரை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை அங்கு கார் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில், போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது, சம்பவத்தன்று மர்ம நபர்கள் காரை திருடி செல்வது பதிவாகி இருந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், காரை திருடிச்சென்ற மர்ம நபர்கள் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்திருப்பதும், அவர்கள் கால்டாக்சியில் சேலத்தை சுற்றி வருவதும் தெரியவந்தது.
மும்பையில் 2 பேர் சிக்கினர்
இதையடுத்து போலீஸ் பிடியில் அந்த கால்டாக்சி டிரைவர் சிக்கினார். அவரிடம் விசாரித்தபோது, கடந்த மாதம் 2 பேர் சேலத்திற்கு வந்து கால்டாக்சியில் ஏறி சேலத்தை சுற்றி பார்த்து வந்துள்ளனர். அவர்கள் கார் வாடகையை கூகுள்பே மூலம் செலுத்திவிட்டு சென்றிருப்பதாக கார் டிரைவர் போலீசாரிடம் கூறினார்.
இதையடுத்து கூகுள்பேவிற்கு அனுப்பிய செல்போன் எண்ணை வைத்து விசாரித்தபோது, அந்த 2 பேர் மும்பையில் இருந்து குஜராத்திற்கு சென்றிருப்பது தெரிந்தது. சேலத்தில் இருந்து தனிப்படை போலீசார் குஜராத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது, அங்கு இருவரும் போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் நியூ மும்பையை சேர்ந்த விஜய்ராவ்சிங் மகன்கள் ஜாஸ்பிரிட்சிங் (24), பர்மீந்தர்சிங் (22) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணை
இவர்கள் இருவரும் திருடிய காரை பெங்களூருவில் உள்ள ஒருவரிடம் விற்பனை செய்துள்ளனர். அதன்பிறகு அந்த நபர் வேறு ஒருவருக்கு காரை விற்றுவிட்டார். அந்த நபரை போலீசார் பிடித்து அவரிடம் இருந்து காரை மீட்டனர்.
இந்த வழக்கில் ஜாஸ்பிரிட்சிங், பர்மீந்தர்சிங் இருவரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தமிழகத்தில் வேறு மாவட்டங்களில் கார்கள் திருடி உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.