தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் இடங்களில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் இடங்களில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார்.
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் இடங்களில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார்.
தாமிரபரணி ஆறு
வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் கடந்த 2 ஆண்டுகளாக கழிவு நீர் அதிகமாக கலக்கிிறது. இதனால் ஆற்று தண்ணீரை பயன்படுத்த முடியாத அவல நிலையாக உள்ளது.
தாமிரபரணி ஆற்றில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.
இந்தப்பகுதிகளுக்கு செல்லக்கூடிய குடிநீர், தற்போது சாக்கடை கலந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் குடிக்க முடியாத நிலைக்கு மாறி வருவதாக கூறப்படுகிறது.
கழிவுநீர் கலப்பு
இந்தநிலையில் நெல்லை மாநகராட்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் 20 இடங்களில் கழிவுநீர் கலப்பதாகவும், இதனை தடுக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட நிர்வாகம் உதவி கலெக்டர் சந்திரசேகர் தலைமையில் ஒரு குழு நியமனம் செய்யப்பட்டது. இந்த குழுவினர் நெல்லை மாநகர பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் ஓடைகள் கலக்கும் இடங்களை நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.
ஆணையாளர் ஆய்வு
இந்தநிலையில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி நேற்று தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் பகுதியான மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை, குறுக்குத்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி கூறுகையில், நெல்லை மாநகரப் பகுதியில் தாமிரபரணி ஆற்றின் நதிக்கரைகளில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீரை தாமிரபரணி ஆற்றில் கலக்கும் வண்ணம் செய்துள்ளனர். இதுதொடர்பாக பல இடங்களில் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். இந்த ஆய்வை தொடர்ந்து ஒரு குழுவை அமைத்து மாநகராட்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றின் நதிக்கரைகளில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் கலப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முதல் கட்டமாக நோட்டீஸ் வழங்க உள்ளோம்.
வீடுகளுக்கு அபராதம்
மேலும் அந்தந்த பகுதியில் கழிவுநீர் ஓடைகளில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்காத வண்ணம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளோம். மேலும் அவர்கள் வீட்டிற்கு அருகே பாதாள சாக்கடை திட்டம் இருந்தால் பாதாள சாக்கடை திட்டத்தில் உடனடியாக அந்த இணைப்புகளை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் அதேபோல் செய்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும், நாங்களே அவர்கள் வீட்டிற்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கவும் தயாராக இருக்கிறோம. என்றார்.