முல்லை பெரியாறு குடிநீர் திட்டப்பணிகளை நள்ளிரவில் ஆய்வு செய்த மாநகராட்சி கமிஷனர்- அதிகாரிகளிடம் கண்டிப்பு
முல்லை பெரியாறு குடிநீர் திட்டப்பணிகளை, மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார் நள்ளிரவில் ஆய்வு செய்தார். அப்போது அவர் அதிகாரிகளிடம் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார்.
முல்லை பெரியாறு குடிநீர் திட்டப்பணிகளை, மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார் நள்ளிரவில் ஆய்வு செய்தார். அப்போது அவர் அதிகாரிகளிடம் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார்.
போக்குவரத்து நெருக்கடி
மதுரை மாநகருக்கு வைகை அணையில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வந்து வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நீர், ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற அடிப்படையில்தான் மக்களுக்கு வழங்கப்படுகிறது. மதுரை மக்களுக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்வதற்காக கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது முல்லை பெரியாறு குடிநீர் திட்டம் சுமார் ரூ.1,200 கோடியில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கின.
தற்போது அந்த பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குழாய் பதிக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
போக்குவரத்து நெரிசல்
அதே போல் நகர் முழுவதும் இந்த குடிநீரை ஏற்றுவதற்கு மேல்நிலை தொட்டிகள் கட்டும் பணி, குழாய் பதிக்கும் பணிகள் நடக்கின்றன. முக்கிய சாலைகளில் இந்த குழாய் பதிக்கும் பணியால் சில இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. குறிப்பாக தற்போது மதுரை-திருப்பரங்குன்றம் சாலையில் குழாய் பதிக்கும் பணிகளால் கடும் நெருக்கடி உண்டாகி உள்ளது. அங்குள்ள சரவணா ஸ்டோர்ஸ் முதல் பழங்காநத்தம் வரை உள்ள 760 மீட்டர் தூரத்திற்கு குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதற்காக 10 அடி ஆழம் வரை சாலைகள் தோண்டப்பட்டு, 3 அடி குடிநீர் சிமெண்டு குழாய்கள் பதிக்கப்படுகிறது.
சாலையின் ஒரு புறத்தில் இந்த பணிகள் நடப்பதால், மற்றொரு ஒரு புறத்தில் மட்டுமே வாகன போக்குவரத்து உள்ளது. மறுபுறத்தில் இருந்து வரும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு மாறி, மாறி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அதனால் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. அந்த பகுதியை கடக்க சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இது குறித்து தினத்தந்தியிலும் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
நள்ளிரவு ஆய்வு
இந்த நிலையில், இந்த பணிகளை துரிதப்படுத்த கமிஷனர் பிரவீன் குமார் உத்தரவிட்டார். அதற்காக பகல் நேரத்தில் மட்டுமே நடந்து வந்த இந்த பணியினை இரவு நேரத்திலும் மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் அந்த பணிகள் சரியாக நடக்கிறதா என்பதனை ஆய்வு செய்ய கமிஷனர் பிரவீன் குமார் நள்ளிரவு சுமார் 12.30 மணிக்கு அங்கு ஆய்வுக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் மாநகராட்சி பெண் செயற்பொறியாளர் பாக்கியலட்சுமி இருந்தார். அவரிடம் கமிஷனர், பணிகள் குறித்து கேட்டறிந்தார். தினமும் இரவும் பணிகளை மேற்கொண்டு குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக முடிக்க வேண்டும் என்று கண்டிப்புடன் உத்தரவிட்டார். கமிஷனரின் இந்த உத்தரவால் 25 நாட்களுக்கு நடக்க வேண்டிய பணிகள், இன்னும் 10 நாட்களுக்குள் முடிந்து விடும் என்று அதிகாரிகள் கூறினர்.