பேட்டை பகுதியில் மாநகராட்சி மேயர் சரவணன் ஆய்வு
பேட்டை பகுதியில் மாநகராட்சி மேயர் சரவணன் ஆய்வு செய்தார்.
பேட்டை:
நெல்லை மாநகராட்சி பேட்டை வார்டு 18, 20, 22 ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் ஆய்வு செய்தனர். பேட்டை தபால் நிலையம் முன்பு போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இன்றி வாகனங்கள் செல்ல வசதியாக நெடுஞ்சாலை துறையின் மூலம் வேகத்தடை அமைக்கவும், அப்பகுதியில் இருபுறங்களில் உள்ள கழிவு நீரோடைகளை சீரமைத்திட மதிப்பீடு தயார் செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அறிவுறுத்தினர்.
மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு வேகத்தடை அமைக்கவும், பேட்டை ஆதம்நகரில் தார் சாலை, மின் விளக்கு மற்றும் முடிவுற்ற பணிகளை பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் மாநகராட்சி வாகனம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. சிவன் கோவில் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்து குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தனர். ஆய்வின்போது மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர் பேரின்பம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.