வளர்ச்சி திட்டப்பணிகளை பேரூராட்சி இயக்குனர் ஆய்வு
விளாத்திகுளம், எட்டயபுரம் பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை பேரூராட்சி இயக்குனர் ஆய்வு செய்தார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து பேரூராட்சிகள் இயக்குனர் கிரண் குராலா மற்றும் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதனை முன்னிட்டு பேரூராட்சி அலுவலகத்தில் விளாத்திகுளம் பகுதியில் கடந்தாண்டு நடைபெற்று முடிந்த பணிகள் மற்றும் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தனர். அதனைத்தொடர்ந்து விளாத்திகுளத்தில் உள்ள நூலகத்திற்கு சென்று அங்கு போட்டித்தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களிடம் நூலகத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், நூலகத்திற்கு தேவைப்படும் புத்தகங்கள் குறித்தும் கேட்டனர். பின்னர் விளாத்திகுளம் பஸ்நிலையத்தில் உள்ள வணிக வளாகங்களை பார்வையிட்டனர். தொடர்ந்து பேரூராட்சியின் வளமீட்பு பூங்காவிற்கு சென்று அங்கு நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளையும், மண்புழு மற்றும் இயற்கை உரம் தயாரிப்பையும் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரவேல், பேரூராட்சி தலைவர் அய்யன் ராஜ், தாசில்தார் சசிகுமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதேபோல் எட்டயபுரம் பேரூராட்சியிலும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், துணைத் தலைவர் கதிர்வேல், சுகாதார ஆய்வாளர் பூவையா, மேற்பார்வையாளர் சரவணன் உட்பட அரசு அதிகாரிகள், பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.