நகராட்சி கூட்டம்


நகராட்சி கூட்டம்
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் நகராட்சி கூட்டம் நடந்தது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ராசையா, ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் லதா, உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், மேலாளர் சண்முகவேல், சுகாதார அலுவலர் இளங்கோ, நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல பிரிவு மாரியப்பன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் அனைவரும் பேசினர்.

கூட்டத்தில் நகராட்சிக்கு சொந்தமான மேலக்கடையநல்லூர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் டேபிள் அமைப்பது, ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் மீத்திறன் வகுப்பறை அமைப்பது, ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி அமைப்பது, பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி கழிப்பறைகளுக்கு ரூ.9 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் சிறப்பு மராமத்து பணிகள் மற்றும் சுற்றுச்சுவரை பலப்படுத்தி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கொழும்பு தெரு நுண்ணுயிர் உரக்குடில் மையம் அருகில் ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக சமுதாய கழிப்பறை கட்டும் பணியை மேற்கொள்வது உள்ளிட்ட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடையநல்லூர் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் சுதந்திர போராட்ட தியாகி வீரன் அழகுமுத்துக்கோன் புதிய படத்தை திறக்க வேண்டும் என கடந்த நகராட்சி கூட்டத்தில் நகராட்சி 10-வது வார்டு கவுன்சிலர் முருகன் உள்பட 5-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தீர்மானத்தை கொண்டு வந்தனர். அதன்படி நேற்று நகராட்சி கூட்டம் தொடங்குவதற்கு முன்பு நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் சுதந்திர போராட்ட தியாகி வீரன் அழகுமுத்துக்கோன் உருவப்படத்தை நகராட்சி தலைவர் ஹபீபுர் ரஹ்மான் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நகரமைப்பு அலுவலர் காஜாமைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story