நகராட்சி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள்முற்றுகையிட்டு போராட்டம்


நகராட்சி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள்முற்றுகையிட்டு போராட்டம்
x

நகராட்சி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அரியலூர்

முற்றுகை

அரியலூர் நகராட்சியில் 85 ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென 11 ஆண்களையும், 13 பெண்களையும் என மொத்தம் 24 துப்புரவு பணியாளர்களை நகராட்சி நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென வேலையை விட்டு நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுமார் 20 ஆண்டுகளாக பணியாற்றிய ஒப்பந்த பணியாளர்களை திடீரென வேலையை விட்டு நீக்கியதை கண்டித்து, துப்புரவு பணியை புறக்கணித்த நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் அரியலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் பணியில் இருந்து நீக்கியவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஆணையர் தமயந்தியை சந்தித்து மனு அளித்தனர். அப்போது அவர், பணியாளர்கள் வேலை நீக்கம் குறித்து தங்களுக்கு இதுவரை தகவல் வரவில்லை என தெரிவித்தார். பின்னர் ஒப்பந்த பணியாளர்களின் ஒப்பந்ததாரரிடம் ஆணையர் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

மீண்டும் பணி வழங்கல்

பின்னர் வேலையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பலாம் என கூறியதை அடுத்து காலை 5 மணி முதல் நடைபெற்ற முற்றுகை போராட்டம் 9 மணிக்கு முடிவுக்கு வந்தது. ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட நிரந்தர பணியாளர்கள் பணிக்கு திரும்ப முற்பட்டபோது, தங்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். ஆணையரிடம் பேசிய பிறகு மீண்டும் பணிக்கு திரும்பலாம் என அறிவித்ததை அடுத்து பரபரப்பு முடிவுக்கு வந்தது.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் 30 வயதில் இருந்து 56 வயது வரை உள்ள 24 நபர்கள் ஆவர். போராட்டத்தின்போது பணியில் இருந்து நீக்கப்பட்ட துப்புரவு பணியாளர் 56 வயதான ஜோதி கதறி அழுத்தார். அப்போது அவர் கூறுகையில், தான் 2004-ம் ஆண்டு முதல் ரூ.300 சம்பளத்தில் வேலை பார்க்க ஆரம்பித்து, கடந்த 4 நாட்களுக்கு முன்பு வரை வேலை பார்த்து வந்தேன். தற்போது வேலையில் இருந்து நீக்கப்பட்டதால் தான் எங்கு சென்று பிழைக்க முடியும், முதியோர் உதவித்தொகைக்கு கூட இன்னும் விண்ணப்பிக்க வயது இருக்கிறது என கண்ணீர் மல்க தெரிவித்தார். இது பார்ப்போரின் கண்களில் இருந்து கண்ணீர் வர செய்தது. இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story