ரூ.5 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்
முத்தூர் பேரூராட்சி பகுதிகளில் ரூ.5 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சாமிநாதன் தொடங்கிவைத்தார்.
12 திட்டப்பணிகள்
முத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட மலையத்தாபாளையம், சோத்தியக்காடு பகுதியில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.68½ லட்சம் மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி, கரட்டுப்பாளையம், காந்திநகர் பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சத்தில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி, தொட்டியபாளையம், வெங்கமேடு பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.66 லட்சம் மதிப்பில் புதிய தார்ச்சாலை மாற்றி அமைக்கும் பணி, சமத்துவபுரம் பகுதியில் ரூ.39 லட்சம் மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி.
முத்தூர் செல்லாண்டியம்மன் கோவில் வீதி ஈஸ்வரன் கோவில் வீதி, திருவள்ளுவர் நகர் பகுதிகளில் மாநில நிதி ஆணைய திட்டத்தின் கீழ் ரூ 43 லட்சம் மதிப்பில் பழுதடைந்துள்ள சாலையை சிமெண்ட் சாலையாக மாற்றி அமைக்கும் பணி, முத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தல் உள்பட மொத்தம் ரூ.4 கோடியே 88 லட்சம் மதிப்பில் 12 புதிய திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் திறந்து வைத்தல் விழா நடைபெற்றது.
அடிக்கல் நாட்டுதல்
விழாவிற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அ.லட்சுமணன் தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தும் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்தும் வைத்தார்.
விழா நிறைவாக தொட்டியபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. முடிவில் அனைவரும் சுகாதார உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ராசி கே.ஆர்.முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் கே.சந்திரசேகரன், முத்தூர் பேரூர் செயலாளர் செண்பகம் பாலு, பேரூராட்சி தலைவர் எஸ்.சுந்தராம்பாள், துணைத் தலைவர் மு.க.அப்பு, செயல் அலுவலர் ஆல்பர்ட், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ராஜலட்சுமி, முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்.பிரசாத்தாமரைக்கண்ணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள், நகர, கிராம பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.