முரசொலி நிலம் வழக்கு: தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தேசிய பட்டியலின ஆணையம் விசாரிக்க தடை கேட்டு முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை,
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தி.மு.க. நாளிதழான முரசொலி நாளிதழ் அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளது என்று தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தில் பா.ஜ.க. மாநில நிர்வாகி சீனிவாசன், கடந்த 2019-ம் ஆண்டு புகார் செய்தார். இதற்கு பதில் அளிக்கும்படி முரசொலி அறக்கட்டளைக்கு தேசிய எஸ்.சி.,எஸ்.டி. ஆணையம் சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முரசொலி அறக்கட்டளை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் நிலம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், முரசொலி அலுவலகம் உள்ள நிலம் பஞ்சமி நிலம் இல்லை என்று தெளிவுப்படுத்தி இருந்தது.
இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, "முரசொலி அலுவலகம் உள்ள நிலம் பஞ்சமி நிலம் என்று கூற எந்த ஆதாரத்தையும் புகார்தாரர் சமர்ப்பிக்கவில்லை. அரசியல் காரணத்துக்காக கொடுக்கப்பட்ட புகாரை முடித்து வைக்காமல் உள்நோக்கத்துடன், தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் நிலுவையில் வைத்துள்ளது. இத்தனைக்கும் இந்த புகாரை விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை'' என்று வாதிட்டார்.
ஆணையம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "முரசொலி அலுவலக நிலத்துக்கு உள்ள பட்டா, விற்பனை பத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில், அந்த நிலத்தின் உரிமையாளரை முடிவு செய்வதற்காக இறுதி ஆதாரம் இல்லை. எனவே, ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக்கூடாது'' என்று வாதிட்டார்.
புகார்தாரர் தரப்பில், "வழக்கு நிலுவையில் இருக்கும்போது, இந்த நிலத்துக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. வில்லங்கச் சான்றிதழில் 1974-ம் ஆண்டு மாதவன் நாயர் பெயரோ, அஞ்சுகம் பதிப்பகம் பெயரோ இல்லை'' என்று வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை இன்று (புதன்கிழமை) வழங்குவதாக உத்தரவிட்டார்.
இந்த நிலையில், வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக கொடுக்கப்பட்ட புகார் தொடர்பான விசாரணையை தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் தொடரலாம் என்றும் பழைய நோட்டீசை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், புதிதாக நோட்டீஸ் அனுப்பி சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அனைத்து தரப்புக்கும் வாய்ப்பளித்து விளக்கத்தையும் பெற்று விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.
மேலும் தேசிய பட்டியலின ஆணையம் விசாரிக்க தடை கேட்டு முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.