"திருமணத்துக்கு வற்புறுத்தியதால் நண்பருடன் சேர்ந்து தீர்த்துக்கட்டினேன்"
திருப்பூர் அருகே திருமணத்துக்கு வற்புறுத்தியதால் நண்பருடன் சேர்ந்து வடமாநில பெண்ணை கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வடமாநில பெண்
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி ராக்கியாபட்டியில் மயானம் உள்ளது. இந்த பகுதியில் கடந்த 25-ந்தேதி 40 வயது மதிக்கத்தக்க வடமாநில பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டும், கல்லால் தாக்கியும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக்கிடந்தார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதைத் தொடர்ந்து இறந்து கிடந்த பெண் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
2 பேர் சிக்கினர்
இந்த நிலையில் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள திருமுருகன்பூண்டி சோதனை சாவடியில் போலீசார் 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் இருவரும் வடமாநில பெண் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் பெருமாநல்லூர் பகுதியில் வசித்து வரும் பீகாரைச் சேர்ந்த வினைகுமார் (32), அவரது நண்பர் திருப்பூர் பாண்டியன் நகரில் வசிக்கும் பீகாரைச் சேர்ந்த விகாஷ்குமார் (33) என்பதும் தெரிய வந்தது.
கொலை செய்யப்பட்ட பெண் திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் வசித்து வந்த மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சீத்தல் ரகசி (வயது 33) என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட சீத்தல் ரகசியுடன், வினைகுமார், விகாஷ்குமார் ஆகியோர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். சீத்தல் ரகசிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் இறந்த நிலையில், திருமணம் செய்யாமல் வினைக்குமாருடன் கடந்த 2 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
2 வாலிபர்கள் கைது
இதற்கிடையில் வினைகுமாருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். இது குறித்து சீத்தல்ரகசி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வினைகுமார், தனது நண்பர் விகாஷ்குமாருடன் சேர்ந்து, சீத்தல் ரகசியை பெருமாநல்லூைர அடுத்த ராக்கியாப்பட்டி மயானத்திற்கு அழைத்து சென்று கழுத்தை நெரித்தும், கல்லால் தாக்கியும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக போலீசார். தெரிவித்தனர்.
இதையடுத்து வினைக்குமார், விகாஷ்குமார் ஆகிய 2 பேரை பெருமாநல்லூர் போலீசார் நேற்று கைது செய்து அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.